×

இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சிறுமியை விருந்தாக்கிய கொடூரம்

* சினிமா ஆடை வடிவமைப்பாளர் காதலனுடன் கைது, சர்வீஸ் அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்து சிறுமி சீரழிப்பு

சென்னை: இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக பெண் சினிமா ஆடை வடிவமைப்பாளர் தனது காதலனுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியின் பெற்றோர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளனர்.

அந்த புகாரில், எனது இளைய மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’ உங்கள் மகள் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். எனவே எனது மகளை சீரழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரின் மீது நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

வசதியான சிறுமி என்பதால் அடிக்கடி தன்னுடன் படிக்கும் தோழிகளுடன் அண்ணாநகரில் உள்ள கபேவுக்கு சென்று தேநீர், உணவு சாப்பிடுவாராம். இதன்படி கபேவிற்கு பெருங்களத்தூரை சேர்ந்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் பிரதிஷா ஆதிரா (20) என்பவர் தனது ஆண் நண்பர்களுடன் சென்று வருவாராம். அப்போது பள்ளி சிறுமியுடன் பிரதிஷா ஆதிரா நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது பிரதிஷா ஆதிரா பள்ளி சிறுமியிடம் ‘உன் அழகுக்கு நீ சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் பெரிய நடிகையாக வருவாய்’ என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் செல் நம்பரை பிரதிஷா ஆதிரா வாங்கி அடிக்கடி வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதுடன் அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். கடந்த மே மாதம் 2வது வாரத்தில் சிறுமி தனது நண்பர்களுடன் அண்ணாநகர் கபேவிற்கு வந்தபோது அவர்களை சந்தித்த பிரதிஷாஆதிரா, ‘’தனது பிறந்தநாளை மே 13ம் தேதி கொண்டாட உள்ளேன். பிறந்த நாள் விழாவுக்கு நீ கண்டிப்பாக வர வேண்டும்’’ என்று கேட்டுள்ளார். இதன்படி சிறுமி கடந்த 13ம் தேதி அவரது பெற்றோரிடம் சென்று உடன் படிக்கும் தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு செல்கிறேன். நாளைதான் வீட்டிற்கு வருவேன்’ என்று கூறியுள்ளார்.

இதன்பிறகு பிரதிஷாஆதிராவுக்கு சிறுமி போன் செய்து ‘’எங்கே வர வேண்டும்’’ என்று கேட்டுள்ளார். அதற்கு ஆதிரா, ‘’நானே வந்து அழைத்துச் செல்கிறேன்’’ எனக் கூறி 13ம் தேதி சாலிகிராமத்தில் ஆன்லைன் மூலம் \\”ஓஒய்ஓ\\” ஆப் மூலம் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் புக் செய்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு பிரதிஷாஆதிரா சிறுமியிடம், ‘’இது எனது காதலன்’ என்று வடபழனியை சேர்ந்த கல்லூரி மாணவர் சோமேஷ் (எ) சோமசுந்தரம் (21) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் பிறகு தனது ஆண் நண்பர் என்று வில்லியம்ஸ் என்பவரையும் அறிமுகம் செய்து உள்ளார். பின்னர் பிரதிஷாஆதிரா, தனது காதலன் சோமேஷ் உடன் பிறந்தநாள் கேக் வெட்டி, சிறுமி மற்றும் ஆண் நண்பருக்கு கொடுத்துள்ளனர். இதன்பிறகு அனைவரும் தங்களது செல்போனில் பாட்டு போட்டுக்கொண்டு பிரதிஷாஆதிரா தனது காதலன் சோமேஷ் உடன் நடனமாடியுள்ளார். அந்த சமயத்தில் சிறுமியை வலுக்கட்டாயமாக வில்லியம்ஸ் தன்னுடன் நடனமாட கட்டாயப்படுத்தி சிறுமியுடன் நடனமாடியுள்ளார்.

நடனமாடும் போதே சிறுமியின் உடலின் பல இடங்களில் வில்லியம் தொட்டுப் பாலியல் ரீதியாக ஆசைகளை தூண்டியுள்ளார். இதன் பிறகு சிறுமியை நாளை காலையில் வீட்டிற்கு செல்லலாம் என்று பிரதிஷாஆதிரா கூறியுள்ளார். அதற்கு சிறுமி, இல்லை `நான் உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரதிஷாஆதிராவை அவரது ஆண் நண்பர் வில்லியம்ஸ் தனியாக அழைத்து சென்று, சிறுமியுடன் நான் இன்று ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நீ உதவி செய் என்று வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு பிரதிஷாஆதிரா ஒப்புக்கொண்டு, ஏற்கனவே வில்லியம்ஸ் மயக்க மருந்து கலந்துகொண்டு வந்த இனிப்பை பிரதிஷாஅதிராவிடம் கொடுத்து சிறுமியிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். இதன்படி பிரதிஷாஆதிரா மயக்க மருந்து கலந்த இனிப்பை சிறுமியிடம் கொடுத்து இதை சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். இனிப்பை சிறுமி சாப்பிட்டதும் அவருக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதிஷாஆதிராவிடம் சிறுமி கூறியதும் வேறு ஒன்றும் இல்லை.

அதிகமாக இனிப்பை சாப்பிட்டதால் அப்படி இருக்கும் என்று கூறி சிறிதுநேரம் அறையில் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டிற்கு போ என்று கூறியுள்ளார். அதன்படி சிறுமி படுக்கை அறைக்கு சென்றதும் எனக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தண்ணீர் எடுத்து வருகிறேன் என்று வில்லியம்ஸை சிறுமியின் அறைக்குள் அனுப்பி அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டார். இதன்பிறகு மயக்கத்தில் இருந்த சிறுமிக்கு உதவி செய்வது போல், வில்லியம்ஸ் அவரின் ஆடைகளை கலைந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மற்றொரு அறையில் பிரதிஷாஆதிராவும் அவரது காதலன் சோமேஷுடன் நெருக்கமாக இருந்துள்ளார். பிறகு பிரதிஷாஆதிரா நான் வீட்டிற்கு செல்கிறேன். சிறுமியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர் புறப்பட்டுள்ளார். இதன்பிறகு பிரதிஷாஆதிராவின் காதலன் சோமேஷ், வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமியை அன்று இரவு முழுவதும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். சிறுமிக்கு மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் காலையில் நடந்த சம்பவத்தை சிறுமி, பிரதிஷாஆதிராவை தொடர்புகொண்டு தெரிவித்து அழுதுள்ளார். அப்போது பிரதிஷாஆதிரா, இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவோம். உனது நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ எங்களிடம் இருக்கிறது. ஒழுங்காக வீட்டிற்கு போ என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிற்கு வந்துவிட்டார். இதன்பிறகு நடக்க முடியாமல் 2 நாட்கள் அவதிப்பட்டுள்ளார்.

அவரது மூத்த சகோதரி தனது தங்கையிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய், என்ன பிரச்னை என்று கேட்டதும், நடந்த சம்பவத்தை சிறுமி தெரிவித்து அழுதுள்ளார். பிறகு அவரது சகோதரி தங்கையின் ஆடையை அகற்றி பார்த்தபோது, பல இடங்களில் காயங்கள், உடல் முழுவதும் வீக்கமாக இருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். அவர் தனது தங்கையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார். டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த சிறுமியின் பெற்றோரிடம், சிறுமிக்கு ஏற்பட்டுள்ள கொடூரம் குறித்து டாக்டர்கள் கூறி உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார் அளிக்க கூறியுள்ளனர். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து அவரது பெற்றோர் வெளியில் சொல்ல முடியாமல் கதறி அழுதனர். இதுசம்பந்தமாக போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்திய போது, ஓஒய்ஓ ஆப் மூலம் வாடகைக்கு எடுத்து சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் நேரில் சென்று சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்தபோது, சிறுமியை சினிமா ஆடை வடிவமைப்பாளர் பிரதிஷாஆதிரா தனது காதலன், ஆண் நண்பருடன் அழைத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து சினிமா ஆடை வடிவமைப்பாளர் பிரதிஷாஆதிரா, அவரது காதலன் சோமேஷ் மற்றும் ஆண் நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரதிஷாஆதிரா மற்றும் அவரது காதலன் சோமேஷை நேற்று முன்தினம் கைது செய்தோம். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி வில்லியம்சை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சிறுமியை விருந்தாக்கிய கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு...