×

தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் குறுஞ்செய்தி மூலம் பட்டா மாறுதல் தகவலை தெரிவிக்க நடவடிக்கை: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வரும் ஜூன் மாதம் 15-ம்தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையில் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெறுகிறது.

இதன் மூலம் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்பான தகவல்களை பதிவுத்துறை வருவாய்துறைக்கு தெரிவிக்கிறது. இந்த தகவலின் அடிப்படையிலேயே உரிய நபருக்கு காலதாமதம் இன்றி பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதேபோல தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, வரும் ஜூன் 15ம் தேதி முதல் 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த பத்திரப் பதிவுக்கு பின்பு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து குறுஞ்செய்தி (SMS) வாயிலாக கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும்.

உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெற தனது கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும். இந்த ஆவணத் தயாரிப்பின் போது சில விவரங்களை சரிபார்த்துக் கொள்ள அலுவலர்களுக்கு அறிவவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பதை தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்து விவரமும் அளவுகளும், நான்கெல்லைகளும் வருவாய்த்துறை நடப்பு சான்றுகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்து கொண்டு அதன்படி ஆவணம் தயாரிக்க வேண்டும். முன் ஆவணச் சொத்து இதர விவரங்களை சரிபார்த்து ஆவணம் தயாரிக்க வேண்டும். சொத்து வரியின் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது, வரிவிதிப்பு பெயர்களை சரிபார்த்து ஆவணம் தயாரிக்க வேண்டும்.

இறந்தவர் பெயரில் பட்டா இருப்பின் பட்டாவில் வாரிசுகள் பெயரை சேர்த்த பின் ஆவணம் தயாரிக்க வேண்டும். கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றியபின் ஆவணம் தயாரிக்க வேண்டும். இந்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் குறுஞ்செய்தி மூலம் பட்டா மாறுதல் தகவலை தெரிவிக்க நடவடிக்கை: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...