×

பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை மீது தமிழிசை தாக்கு: திருச்சி சூர்யா பாய்ச்சலால் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்

திருச்சி: பாஜவில் ரவுடிகள் அதிகளவில் பதவி வகிப்பதாக அண்ணாமலையை தாக்கி தமிழிசை பேட்டி அளித்திருந்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகி திருச்சி சூர்யா கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவால் பாஜவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. தமிழக பாஜவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘பாஜவில் எனக்கு சில வருத்தங்கள் இருக்கிறது. நான் பொறுப்பில் இருக்கும் போது ஒருவரையறை வைத்திருந்தேன். கட்சியில் சமூக விரோதிகள் போல் இருந்தால் அவர்களை நான் என்கரேஜ் பண்ணமாட்டேன்.

சமீப காலத்தில் கட்சியில் சமூகத்தில் அதிகளவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ரவுடிகள், பல்வேறு வழக்குகள் உள்ளவர்கள்) பதவி வகித்து வருகின்றனர். எனவே அவர்களை தவிர்த்து கட்சிக்காக இன்னும் கடுமையாக உழைக்க கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம், அங்கீகாரம் கொடுக்க வேண்டும். பாஜவின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நல்ல தலைவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எனவே முடிவுகள் என்பது வேறுவேறாக இருக்கலாம். நான் என்னுடைய முடிவை சொன்னேன். அவர் அவருடைய முடிவை கூறியுள்ளார்’ என கூறியிருந்தார்.

தமிழிசையின் கருத்துக்கு பதில் அளித்து அண்ணாமலை ஆதரவாளர் திருச்சி சூர்யா எக்ஸ் வளைதளத்தில் ஒரு பதிவை வௌியிட்டுள்ளார். அதில், ‘தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர். பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான். வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.

கட்சியின் வளர்ச்சியையும், தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம். அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா?. பாஜவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாகியது. இது கட்சி கட்டுப்பாடா? இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னாள் மாநில தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும். எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை. அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம். இவ்வாறு திருச்சி சூர்யா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த தமிழிசை, பாஜ ஐடி பிரிவுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். எல்லை மீறி சென்றால் முன்னாள் மாநில தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார். தேர்தலில் பாஜ தோல்வி அடைந்த பிறகு அண்ணாமலைக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில தலைவர் பதவிக்கு தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் காய் நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில், அண்ணாமலை தலைவராக இருந்த காலத்தில்தான் ரவுடிகள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழிசை கூறியதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகி பதிலளித்ததன் மூலம் பாஜவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் அடைந்து உள்ளது.

The post பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை மீது தமிழிசை தாக்கு: திருச்சி சூர்யா பாய்ச்சலால் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,Bajaj ,Trichy Surya ,Trichy ,Annamalai ,BJP ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...