×

பெரம்பலூரில் 11ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 9: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கோட்டசெயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோட்டசெயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நான்கு ரோடு இடையே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (இயக்குதலும் பராமரித்தலும்) கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வைப் பொறியாளர் அம்பிகா தலைமையில் நாளைமறுநாள் (11ம் தேதி) காலை 11மணிமுதல் பகல் ஒரு மணி வரை நடை பெறும். இந்த பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டுத் தீர்வு காணலாம் என கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், ஜூன்9: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (10ம்தேதி) அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒன்றாம் வகுப்புக்கு வருகை தரும் 3,114 மாணவ மாணவியரை வரவேற்க கால்குலேட்டர், பென்சில், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் அடங்கிய சூட் பேக்குகள் வழங்க சப்.கலெக்டர் கோகுல் ஏற்பாடு செய்துள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஏற்கனவே அரசு, ஆதி திராவிடர் நல, அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா பொருட்களாக சீருடை, நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை, காலணி, கணித உபகரணம், வண்ணப் பென்சில், புவியியல் வரைபடம் மற்றும் உணவு, மடிக் கணினி, சைக்கிள், பஸ்பாஸ் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அளவில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கால்குலேட்டர், பேனா, பென்சில் உள்ளிட்ட 3 புதிய கல்வி உபகரணங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் புதிதாக 1ம் வகுப்பு சேரக்கூடிய மாணவ, மாணவியரை வரவேற்கும் விதமாகவும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வழங்கிட, பெரம்பலூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணிபுரிந்து வரும் கோகுல் பிரத்யேகமாக ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) அண்ணா துரை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் தெரிவித்திருப்ப தாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளான 10ம்தேதி (திங்கட்கிழமை) ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர உள்ள மாணவ மாணவிகளுக்கு, கால்குலேட்டர், பென்சில், பேனா, உள்ளிட்ட எழுது பொருட்கள் அடங்கிய சூட்பேக் ஒன்று பெரம்பலூர் மாவட்ட சப். கலெக்டரால் வழங்கப் பட உள்ளது.

இதற்கான அரசு விழா பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதுபோல் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரிதி நிதிகள் தலைமையில் வழங்கிட, அனைத்து பள்ளிகளிலும் விழாக்களை ஏற்பாடு செய்திட அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சூட் பேக்குகளை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர்கள், பள்ளி திறக்கும் நாளுக்கு முன்பாக பெற்றுச் செல்லுமாறும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குரிய பள்ளிகளுக்கான 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில், தேவைபட்டியலுடன் சூட் பேக்குகளை பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலக விநியோக மையத்தில் பெற்றுச்சென்று, விழாக்க ளை சிறப்புற நடத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு 900, பெரம்பலூர் ஒன்றியத்திற்கு 789, வேப்பூர் ஒன்றியத்திற்கு 491, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு 934 என மாவட்ட அளவில் 3,114 சூட் பேக்குகள் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையத்தில் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையாக 100 சதவீத கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான பெரம்பலூர் சப்.கலெக்டர் கோகுல், பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாகவும், புதிதாக அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு வருகை தரும் சின்னஞ்சிறு மாணவ, மாணவியரை அன்போடு வரவேற்கும் விதமாகவும் பிரத்தயேகமாக ஏற்பாடு செய்திருப்பது பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

The post பெரம்பலூரில் 11ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Chief Executive ,Ashokumar ,Quota ,Executive ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்