தஞ்சாவூர், ஜூன் 8: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என வகுப்பறையில் பாடம் எடுத்த ஆசிரியை பணி ஓய்வுக்கு பின் தனது வீட்டின் மேல் மாடியில் பூக்கள், காய்கறிகள் மூலிகை செடிகள் வைத்து தோட்டமாக்கி அசத்தி உள்ளார். தஞ்சாவூர் போஸ்டல் காலனி இரண்டாம் தெருவில் வசித்து வருபவர் சகாயமேரி லீமா. பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். சிறு வயதில் இருந்தே இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என வகுப்பறையில் பாடம் நடத்தி வந்தார். வகுப்பறையில் பூக்கள், காய்கறிகள், மூலிகை செடிகளை மாணவர்களுக்கு காண்பித்து விளக்கம் கொடுத்த தலைமையாசிரியை சகாயமேரிலீமா, பணி ஓய்வுக்கு பின் வகுப்பறையில் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்த பாடத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார். பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்து சொல்லி கொடுத்தார்.
பின் ஓய்வுக்கு பின் மரங்கள், மூலிகை குறித்து பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை நாம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணி ஓய்வு பெற்ற பிறகு செடிகள் வளர்த்து வருகிறார். தேவையான மூலிகை காய்கறிகள் பூக்கள் எனக்கு கிடைக்கிறது. உடம்பு சரியில்லை என்றால் ஒரு மூலிகை பறித்து கசாயம் வைத்து குடித்து விடுவேன். இதுவரை மஞ்சள் தூள் வாங்கியது கிடையாது. என் தோட்டத்தில் உள்ள மஞ்சளை எடுத்து காய வைத்து அரைத்து சமையலுக்கு பயன்படுத்தி வருகிறேன். எனக்கு தேவைக்கு உள்ளது போக மீதி உள்ளதை என் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுத்து விடுவேன். குழந்தைகளுக்கு பள்ளியில் பாடம் சொல்லித் தரும்பொழுது அறிவியல் பாடத்தில் தாவரங்கள், மூலிகை மரங்கள் குறித்து சொல்லித் தருகிறோம். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என பாடம் நடத்தி இருக்கிறேன்.
பிள்ளைகளுக்கு கற்று கொடுத்ததை பணி ஓய்வுக்கு பின் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்தார். மேலும், பூக்களில் மல்லிகை, முல்லை, பன்னீர் ரோஸ், ரெட் ரோஸ், மஞ்சள் ரோஸ், டிசம்பர் பூ மற்றும் அழகு பூக்கள், காய்கறிகள், கத்தரி, வெண்டை, பாகல், அவரை, பூசணி, மூலிகைகளில் ஓமவல்லி, வெற்றிலை, திப்பிலி, குறிஞ்சா, சித்தரத்தை, பல் குத்தி, தூதுவளை, கருவேப்பிலை, முருங்கை என பல வகைகள் வைத்து உள்ளேன் என்றார். சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயத்தோல், காய்கறி தோல், மீன் அரிசி, கறி, பருப்பு கழுவும் தண்ணீர் இவற்றை வாளியில் எடுத்து வைத்து புளித்த மாவு கரைத்து மூடி வைத்து ஒரு வாரம் கழித்து எல்லா செடிகளுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறேன் என்றார்.
The post ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பாடம் நடத்திய ஆசிரியை வீட்டின் மேல் மாடியில் பூக்கள், காய்கறிகள் மூலிகை செடிகள் வைத்து தோட்டமாக்கி அசத்தல் appeared first on Dinakaran.