- யாத்ரி நிவாஸ் விடுதி
- திருவண்ணாமலை கிரிவல சாலை
- திருவண்ணாமலை
- அறநிலையத்துறை
- திருவண்ணாமலை கிரிவலப் பாதை
- திருவண்ணாமலை
- அக்னி தலம்
- பஞ்சபூத தலம்…
- அறக்கட்டளை
- திருவண்ணாமலை கிரிவலப் பாதை
திருவண்ணாமலை, ஜூன் 9: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் நேரடி ஆய்வு நடத்தினர். திருவண்ணாமலை புகழ் பெற்ற ஆன்மிக நகரமாகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே, பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதும், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதும் அவசியமாகியுள்ளது. அதையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன் ஆகியோர் நேற்று நேரடி ஆய்வு நடத்தினர். கிரிவலப் பாதையில் ஈசானிய லிங்கம் பகுதியில் இருந்து தொடங்கிய ஆய்வுப் பணி, கிரிவலப் பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் நடந்தது. அப்போது, கிரிவலப் பாதையில் 21 இடங்களில் புதியதாக நவீன கழிப்பறை வசதிகள் அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், கிரிவலப் பாதையில் குடிநீர் வசதிகளை கூடுதலாக எந்தெந்த இடங்களில் அமைப்பது, பக்தர்கள் ஓய்வு அறைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு நடந்தது.
திருவண்ணாமலைக்கு வருகை தரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் தங்குவதற்கான அறை வசதிகள் போதுமானதாக இல்லை. தற்போது, கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் உள்ள அறைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நிரம்பி விடுகின்றன. எனவே, கூடுதலாக மேலும் ஒரு யாத்ரி நிவாஸ் தங்கு விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை- செங்கம் சாலை சந்திப்பு பகுதியில், அத்தியந்தல் ஊராட்சி எல்லையில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான திட்ட மதிப்பீடு விரைவில் தயாரித்து, அரசின் ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் யாத்ரி நிவாஸ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், சேலம் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெற வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ரிஷப், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தரிசன வரிசையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன் ஆய்வு செய்தார்.
The post பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் * யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி; 21 இடங்களில் கூடுதல் கழிப்பறை * கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் appeared first on Dinakaran.