×

உயர்ந்த பதவிக்கு சொர்ணாகர்ஷண பைரவர்

நீலகண்ட பைரவர், விசாலாட்சி பைரவர், கேர பைரவர், காலபைரவர், சொர்ணபைரவர், சொர்ணகாலபைரவர், விஸ்வரூப பைரவர், நிர்பய பைரவர், ருண்டமாலா பைரவர், கோரநாத பைரவர் என்று பலப்பல விதமான 64 ரூபங்கள், பைரவருக்கு உள்ளது. ஆனால், இந்த 64 பைரவர் ரூபங்களில், சொர்ணாகர்ஷண பைரவ ரூபம் கிடையாது. காரணம், இந்த சொர்ணாகர்ஷண பைரவர், சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும், திருச்ெசங்கோட்டில், சுவாமியும் – அம்பாளும் சேர்த்து அர்த்தநாரீஸ்வரராக இருப்பது போல், இந்த திருத்தலத்தில் பைரவர், கல்யாண திருக்கோலத்திலும், பைரவரின் இடது தொடைப் பகுதியில் அம்பாள் அமர்ந்தும், அம்பாளின் வலது கையானது, பைரவரின் வலது தோள்பட்டையின் மீது வைத்தும், பைரவரை ஆலிங்கனம் செய்வது இத்திருத்தலத்தின் சிறப்பு.

மேலும் பல சிறப்புகள்

பெரும்பாலும் பைரவர்கள், சிவன் கோயில்களில் தனி சந்நதிகளாக மட்டுமே வீற்றிருப்பார்கள். அதுவும், உக்ர மூர்த்தி களாக இருப்பார்கள். இந்த திருத்தலத்தில் மட்டும்தான், பைரவர், சிரித்த முகத்தில் சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் அருகிலேயே அய்யாவாடி என்னும் ஊர் உள்ளது. இங்கு, பிரத்திங்க தேவி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மசானத்தில் அதாவது சுடுகாட்டில் கோயில் கொண்டு அருள்கிறாள், பிரத்திங்க தேவி. அதேபோல் செம்பியவரம்பல், சொர்ணாகர்ஷண பைரவர், நடு வயக்காட்டில் கோயில்கொண்டு அருள்கிறார்.

சுயம்பு

சொர்ணாகர்ஷண பைரவர், சுயம்புவாக தோன்றியவர். சுமார் ஒரு 100 வருட பழமைவாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. ஆகையால், பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அஷ்டமி அன்று செய்யப்படும் யாகமே சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

பெயர்க்காரணம்

இந்த கோயிலின், பிரதான நாயகன் சொர்ணாகர்ஷண பைரவர்தான். சொர்ணாகர்ஷண பைரவர் என்று பெயர் வரக் காரணம், `சொர்ணம்’ என்றால் தங்கம். `ஆகர்ஷணம்’ என்றால் உள்வாங்கிக் கொடுத்தல், அதாவது, இந்த சொர்ணாகர்ஷண பைரவர், காசு பணத்திற்கு அதிபதி. அதனால்தான் இந்த பைரவருக்கு, சொர்ணாகர்ஷண பைரவர் என்று பெயர்.

யாகமும் பிரார்த்தனைகளும்

சொர்ணாகர்ஷண பைரவருக்கு, மாதம்தோறும் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை, அக்ஷ்டமிகளில் மிகசிறப்பான முறையில் யாகங்கள் நடைபெறுகின்றன. இந்த யாகபூஜைகளில், பக்தர்கள் தொடர்ந்து 8 மாதங்கள் பூஜை செய்து வழிபட்டால், வேண்டிய வரத்தை அருள்கிறார், சொர்ணாகர்ஷண பைரவர். அஷ்டமியில் நடைபெறுகின்ற யாகமானது, பொது யாகம் அதாவது கூட்டம் கருதி, பக்தர்கள் அனைவரும் இணைந்துதான் பூஜைகளை செய்யவேண்டும். தனிநபராகவோ அல்லது குடும்பம் சகிதமாக யாகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, மாலையில் செய்யலாம். இது தவிர, அஷ்டமி அல்லாத நாட்களிலும், யாகம் நடைபெறுகின்றன. அஷ்டமி அன்று காலை 10.30 மணியில் இருந்து பிற்பகல் 1.00க்குள் யாகம் நடைபெறும். கடைசியாக உற்சவர் மூர்த்திக்கு தேன், பால், கலாசாபிஷேகம் நடைபெறும்.

வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு

திருமணத் தடைகளை அகற்றி திருமணம் நடைபெறும். மாணாக்கர்களுக்கு கல்வி அபிவிருத்தியாகும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர சந்தான பாக்கியம் கிட்டும். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடும் நோயினால் அவதிப்பட்டு வருபவருக்கு அதிலிருந்து குணமாகுதல் என வேண்டுவோருக்கு, வளர்பிறை அஷ்டமி நாட்களில் தொடர்ந்து 8 மாதம் சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு, யாக பூஜை செய்தால், உடனடியாக நிவர்த்தி செய்கிறார்.

தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு

மிக முக்கியமாக, அரசியலில் நீண்ட காலமாக இருந்து சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க, நிரந்தர வியாபாரம் இல்லாமல் நாளுக் கொன்று வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நிரந்தர வியாபாரம், அதே போல், பெரிய தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டவர்கள், அதில் இருந்து மீண்டுவர, நீங்கள் ஒருவருக்கு கடனாக கொடுத்த பணம் நீண்ட நாட்கள் கடந்தும் திரும்ப வராமல் இருக்கும் உங்கள் பணத்தை திரும்ப பெற, மனதில் உள்ள எம பயம் நீங்க, திருஷ்டி தோஷங்கள் நிவர்த்தியாக, பூர்வ ஜென்ம சாபங்கள் தொலைந்தோட, பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினை கோளாறு ஆகிய பிரச்னைக்கு தீர்வுகாண, தேய்பிறை அஷ்டமி நாட்களில் தொடர்ந்து 8 மாதம் யாக பூஜை செய்து வழிபட்டால், சொர்ணாகர்ஷண பைரவர், அதிலிருந்து காத்து அருள்கிறார்.

தன ஆகர்ஷண யாகம்

பைரவருக்கு அஷ்டமி நாட்களில் செய்யப்படும் யாகத்தின் பெயர், “தன ஆகர்ஷண யாகம்’’ இந்த யாகம், மிக சிறப்பானது என்று நாம் முன்பே கூறியிருந்தோம். இதில், என்னென்ன பொருட்களைக் கொண்டு யாகத்தினை நடத்துகிறார்கள்? என்பதனை தியானிப்போம். முதலாவதாக, கருப்பு மிளகு அதனை தொடர்ந்து, நாட்டுச் சர்க்கரை, முந்திரி ஆகியவை யாகத்தில் சேர்த்து பூஜிக்கப்படுகிறது.யாகத்தில் சேர்க்கப்படும் இந்த பொருட்களை, பக்தர்கள் வாங்கிக் கொடுத்து, வேண்டியதை வேண்டிக் கொண்டால், ஜெயமாகும் என்கிறார்கள். அதுவும், மிளகினைக் கொடுத்து வேண்டிக் கொள்ளும்போது, யாகத்தில் மிளகானது வெடித்தால், நாம் மனதில் நினைத்த காரியம் வெற்றியடையும் என்றொரு ஐதீகமும் உள்ளது.பூஜைகள் முடிந்த பின்னர், இந்த புனுகு என்று சொல்லக் கூடிய மையினை பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். தினமும் இதனை நெற்றியில் சிறிதளவு வைத்துக் கொண்டாலும் அல்லது நம் வீட்டின் பீேராவில் வைத்தாலும், நம்மை அறியாது நமக்குள் ஒரு வசீகரத்தன்மை கிட்டும்.

பைரவருக்கு தனி ஸ்தலம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில், நடராஜர் அருகில், உற்சவர் மூர்த்தியாக மட்டுமே பைரவர் இருக்கிறார். அதே போல், திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு என்னும் இடத்தில், சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். ஆனால், இங்கு அம்பாள் கிடையாது. அதே போல், இது தனி கோயிலும் கிடையாது. இங்கு பிரதானம் சௌந்திரராஜ பெருமாள். ஆகையால், பைரவருக்கென்று தனி ஸ்தலம் என்றால், அது செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு.

அஷ்ட பைரவர்களும் அருள்கிறார்கள்

சொர்ணாகர்ஷண பைரவரின் சுற்றுப்புற எட்டு திசைகளிலும், அஷ்ட பைரவர்கள் அதாவது எட்டு பைரவர்கள் தனித் தனி சந்நதிகளைக் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். ஒவ்வொரு பைரவரும், ஒவ்வொரு வேண்டுதலுக்கு அதிபதி.

1) அசிதாங்க பைரவர் – அசிதாங்க பைரவர், அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர். அன்ன பறவையினை வாகனமாக கொண்ட இவர், கல்விக்கு மிக முக்கியமான பைரவர். மாணாக்கர்களுக்கு கல்வி அபிவிருத்தியை செய்யக் கூடியவர். நவகிரகங்களில், குருவின் கிரக தோஷத்திற்காக, அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக, சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

2) ருரு பைரவர் – ரிஷப வாகனமாக கொண்ட இவர், சுக்கிரனால் ஏற்படும் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். மேலும், வியாபார போட்டி எதிரிகளின் தொல்லைகளில் இருந்து காக்கக் கூடியவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

3) சண்ட பைரவர் – இவர், மயிலை வாகனமாக கொண்டவர். செவ்வாய் கிரக தோஷத்திற்காக சண்ட பைரவரை வழிபடுகிறார்கள். அதே போல், இவரை வேண்டினால், சந்தான பாக்கியமருளி, வம்சத்தை விருத்தியடையச் செய்கிறார். இவருடைய சக்தி வடிவமாக, கௌமாரி விளங்குகிறாள்.

4) குரோதன பைரவர் – கருடனை வாகனமாக கொண்டும், சனியால் பீடிக்கப்பட்டவர்கள், இவரை வணங்கினால் நிவர்த்தியாகிறது. கணவன் – மனைவிக்குள் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளை நீக்கி, அருள்புரிகிறார். சண்டையில்லாமல் சேர்ந்து வாழ, குரோதன பைரவரை வணங்கினால் போதும். சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி, இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.

5) உன்மத்த பைரவர் – புதன் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவர் குதிரையை வாகனமாக கொண்டவர். வியாபாரத்தில், தொய்வு நிலையினைப் போக்கி அருள்கிறார். இவருடைய சக்தி வடிவமாக, சப்த கன்னிகளில் ஒருத்தியான வாராகி விளங்குகிறாள்.

6) கபால பைரவர் – இவருடைய சக்தி வடிவமாக, இந்திராணி விளங்குகிறாள். யானையை வாகனமாக கொண்ட இந்த கபால பைரவர், சந்திர கிரக தோஷத்தை போக்கி அருள் செய்கிறார். அக்ஷய பாத்திரம் என்று சொல்லக் கூடிய தங்கக்கலசத்தை, இவர் கையில் வைத்துள்ளார். இந்த தங்கக்கலசத்திற்கு கபால பைரவர்தான் அதிபதி. இந்த பைரவரை வழிபடுவதன் மூலம், வீட்டில் தங்கநகைகள்அபிவிருத்தியாகும்.

7) பீக்ஷன பைரவர் – பில்லி, சூனியம் போன்ற செய்வினைக்கோளாறுகளை நீக்கி அருளக்கூடியவர். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். கேது கிரக பிரச்னைகளைப் போக்கி அருளக்கூடியவர். இவருடைய சக்தி வடிவமாக, சப்த கன்னிகளில் ஒருத்தியான, சாமுண்டி விளங்குகிறாள்.

8) சம்ஹார பைரவர் – நாயினை வாகனமாகக் கொண்டவர், இந்த சம்ஹார பைரவர். பத்து கைகளைக் கொண்டு எதிரிகளை சம்ஹாரம் செய்யக் கூடியவர். நவக்கிரகங்களில், ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக, சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.மேலும், ஞான ப்ரசூனாம்பிகை சமேதராக காளஹதீஸ்வரர் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கிறார். அதே போல், விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஐயப்பன், துர்க்கை அம்மன் போன்ற பிற சந்நதிகளும் இங்கே ஒன்றுசேர்ந்து அருள்கிறார்கள்.

கோயில் அமைவிடம்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநாகேஸ்வரம் – நாச்சியார் கோயில் செல்லும் வழியில், அய்யாவாடிக்கு அடுத்தது செம்பியவரம்பல் ஊரை அடைந்து விடலாம். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்  சொர்ண பைரவி அம்பிகா சமேத சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் உள்ளது. தொடர்புக்கு: எஸ்.ஹரிஹரன் குருக்கள் – 91597 58278.

The post உயர்ந்த பதவிக்கு சொர்ணாகர்ஷண பைரவர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தோல் நோய்களை குணப்படுத்தும் சிசிலேஸ்வரர்