×

எளியோரைப் புறக்கணிக்காதீர்கள்!

இப்னு உம்மி மக்தூம் என்பவர் நபிகளாரின் தோழர்களில் ஒருவர். பார்வையற்றவர். இரண்டு கண்களும் தெரியாது. ஆனால், நபிகளாரின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். பார்வையற்ற நிலையிலும் நபிகளாரை அடிக்கடி சந்தித்து தமக்கு நல்லுரை வழங்கும்படி கேட்பவர்.ஒருமுறை நபிகளார் (ஸல்) அவர்கள் மக்காவின் பெரும் தலைவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு சத்திய மார்க்கத்தைப் புரிய வைத்துவிட்டால் இறைவனின் அருள்நெறியை மக்களுக்கு எதிர்ப்பின்றி எடுத்துரைக்க ஏதுவாக இருக்குமே என்பது நபிகளாரின் எண்ணவோட்டம். ஆகவே, அந்தக் குறைஷித் தலைவர்களுக்கு மார்க்கத்தைப் புரியவைப்பதில் முழு முனைப்புடன் ஈடுபட்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து பார்வையற்ற உம்மி மக்தூம், நபிகளாரைச் சந்திக்க வந்தார். பெரும் தலைவர்களுடன் நபி களார் பேசிக் கொண்டிருக்கிறார் என்று உம்மி மக்தூமுக்குத் தெரியாது.

அவர் வழக்கம்போல, “இறைத்தூதர் அவர்களே, எனக்கு ஏதேனும் நல்லுரை வழங்குங்கள்” என்று கேட்டார். அவருடைய இந்தக் குறுக்கீட்டை அப்போது நபிகளார் விரும்பவில்லை. முக்கியமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சமய சந்தர்ப்பம் தெரியாமல் குறுக்கிடுகிறாரே என்று நபிகளார் கருதியதால் அதிருப்தியின் காரணத்தால் நபிகளார் சற்றே முகம் சுளித்தார். நபிகளாரின் முகத்தோற்றம் மாறியதோ அவர் முகம் சுளித்ததோ கண்பார்வை இல்லாத உம்மி மக்தூமுக்கு எதுவும் தெரியாது. ஆனால், இறைவன் உடனடியாகத் திருவசனங்களை அருளி, நபிகளாரைக் கண்டித்தான். அந்த வசனங்கள் வருமாறு:

“முகம் சுளித்தார்… மேலும் புறக்கணித்தார். அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக. அவர் சீர்திருந்தக் கூடும் அல்லது அறிவுரைக்குச் செவிசாய்க்கக் கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா என்ன? யார் அலட்சியம் செய்கின்றானோ அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகிறீர். அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீரா பொறுப்பு? மேலும், இறைவனை அஞ்சியவராக யார் உம்மிடம் விரைந்து வருகிறாரோ அவரைக் குறித்து நீர் அலட்சியமாக இருந்துவிடுகிறீர்.” (குர்ஆன் 80: 110)மனித சமத்துவத்திற்கும், சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கும், எளியோருக்கும் குர்ஆன் எத்துணை முக்கியத்துவம் அளிக்கிறது என்பது இந்தத் திருவசனங்கள் ஓர் எடுத்துக்காட்டு. இந்த வசனத்தையே அளவுகோலாக வைத்து இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற சமத்துவ நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்கினால் ஒரு பக்கம் போதாது. அந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்கள் இவை.
– சிராஜுல்ஹஸன்

The post எளியோரைப் புறக்கணிக்காதீர்கள்! appeared first on Dinakaran.

Tags : Ibn Umm Makhtoom ,Makkah ,
× RELATED 125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922...