×

பாலூத்து கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டி கோரிக்கை

 

வருசநாடு, ஜூன் 8: கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே பாலூத்து மலைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேனி பிரதான சாலையில் இருந்து பாலூத்து கிராமம் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலூத்து கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

பாலூத்து கிராமத்துக்கு பஸ் வசதி கிடையாது. எனவே மாணவ-மாணவிகள் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக, காலை 8 மணிக்கே மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளில் இருந்து புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வர மாலை 6 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. எனவே பாலூத்து கிராமத்துக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலை, மாலை வேளைகளில், பாலூத்து கிராமம் வரை அரசு பஸ் இயக்கப்பட்டது. இது மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாலூத்து கிராமத்துக்கு மீண்டும் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post பாலூத்து கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Baluthu village ,Varusanadu ,Baluthu hill village ,Kadamalaikundu ,Kadamalai-Mylai union ,Baluthu ,Dinakaran ,
× RELATED டூர் போக பிளான் போடுறீங்களா… இத மிஸ்...