×

அண்ணாமலை வாலை ஒட்ட நறுக்கிடுவோம்: சிவகங்கையில் அதிமுக போஸ்டர்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தேர்தல் முடிந்தும் இருதரப்பும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அதிமுகவினர் கொந்தளிக்க துவங்கியுள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை நான் தலைவராக இருக்கும் வரை அதிமுக உடன் கூட்டணி கிடையாது என பதிலளித்தார். உடனே அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டால் அண்ணாமலையின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி வரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

* அதிமுக அணிகளை இணைக்ககோரி தொண்டர்கள் போஸ்டர்
சிவகங்கை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைய வலியுறுத்தி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், ‘ஒன்றுபடுத்துவோம், வென்று காட்டுவோம், எம்ஜிஆரால் கட்டி காக்கப்பட்ட அஇஅதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என்பதை எண்ணி கழகத்தின் உண்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுகின்றோம். சிதறி கிடக்கும் கழக தொண்டர்களை ஒன்றுபடுத்துவோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மக்கள் இயக்கமாம் அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

The post அண்ணாமலை வாலை ஒட்ட நறுக்கிடுவோம்: சிவகங்கையில் அதிமுக போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Sivakanga ,Turupuwanam ,Annamala ,Sivaganga ,Tamil Nadu ,Paja Thalawar ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...