×

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர், உதவியாளர் கைது

கடலூர், ஜூன் 8: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணை நகரை சேர்ந்தவர் செல்வம் (40). தச்சு தொழிலாளியான இவர், தனது வீட்டின் பின்புறம் மரப்பட்டறை ஒன்று அமைக்க முடிவு செய்தார். இதற்காக வரி நிர்ணயம் செய்வதற்காக கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் (55) செல்வத்தை அணுகி சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் செல்வம் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து பாஸ்கர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மூன்று தவணைகளாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.10,000 பணத்தை நேற்று மாலை செல்வம் கடலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் வருவாய் உதவியாளர் லட்சுமணன் (45) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரும் மயிலாடுதுறையை சேர்ந்தவருமான பாஸ்கர், உதவியாளர் லட்சுமணன் ஆகியோரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து வரி நிர்ணயம் செய்ய கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் லஞ்சம் பெற்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர், உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Manjakuppam ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்