×

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வெளியிட்டார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் விவசாயப் பெருங் குடும்பத்தினைச் சார்ந்ததவர் என்பதன் அடிப்படையிலும், தான் பெற்றுள்ள நீண்ட அனுபவத்தின் பயனாக, தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில், தன் முயற்சியில் உருவாக்கியுள்ள “தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு” வெளியிடும் விழா இன்று (07.06.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இக்கையேட்டினை வெளியிட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையர் திருமதி வெ.ஷோபனா, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேளாண்துறை அமைச்சர் அவர்கள் இக்கையேட்டினை வெளியிட்டு ஆற்றிய உரையில், “ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கொங்கு மண்டலத்தில் நீண்ட பாரம்பரியம்மிக்க விவசாயக் குடும்பத்திலே பிறந்தவர். இன்றளவும் விவசாயத்தில் கொண்டுள்ள பற்று மற்றும் அக்கரையின் காரணமாகவும், குறிப்பாக தென்னை விவசாயம் குறித்தும், அண்மைக் காலங்களில் தென்னை வளர்ப்பில் விவசாயிகள் மேற்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பூச்சி தாக்குதல் ஆகியவற்றால் விவசாயிகள் பெருமளவு பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் அலுவலர்கள் ஆகியோரின் உதவியோடு பல்வேறு மாவட்டகளில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயப் பெருமக்களும், வேளாண் துறையும் பயன்பெறுகின்ற வகையில், இந்த கையேட்டினை உருவாக்கியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த கையேட்டினை நான் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டார்.

இந்த கையேட்டின் முதல் பிரதியை பெற்றுக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியிலும் தனிப்பட்ட தனது அனுபவத்திலும் உருவாக்கியுள்ள இந்த கையேடு தென்னை விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார். தென்னை நார் பொருட்களின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்ய ரூ. 4 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய ஏற்புரையில், தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் ஒரு முக்கிய பயிராக விளங்கி வருகிறது. தென்னை மரத்தில் சில ஆண்டுகளாக சிவப்பு கூன் வண்டுகள் தாக்குதல், காண்டமிருக வண்டுகள் தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய் போன்ற பல்வேறு நோய்கள், தென்னை மரத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், தென்னை விவசாயிகளினுடைய பொருளாதாரமே பாதிப்புக்குள்ளாகிறது. தென்னை விவசாயத்தை பாதுகாப்பதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், வேளாண்மைத் துறை அமைச்சருடைய வழிகாட்டுதலோடு வேளாண்மைத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து அதற்குரிய மருந்துகளையெல்லாம் உருவாக்கி வருகிறார்கள். மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எளிதாக புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கையேடு விவசாயிகளுக்கு பெரிதும் பயன்தரும்.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முன்மாதிரியான முறையில் கள ஆய்வுகள் மற்றும் திருப்பூர் மாவட்டம்-பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி, ஈரோடு மாவட்டம் – சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பூச்சக்காட்டு வலசு மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், மூலனூர் ஊராட்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் – வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பொங்கலூர் மற்றும் காங்கேயம் நகராட்சி குறிஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி விவசாயிகளுடன் தொடர் கருத்தரங்குகளை மேற்கொண்டேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு கொண்டாடப்படும்  இவ்வேளையில், எனது கள ஆய்விற்கும், இந்த கையேடு உருவாகிட உறுதுணையாக இருந்த இணை பேராசிரியர் (தென்னை) முனைவர் க.இராஜமாணிக்கம், மேனாள் வேளாண்மை இணை இயக்குநர் திரு.மா.மாரியப்பன், இணைப் பேராசிரியர் முனைவர் ப.லதா, இணைப் பேராசிரியர் முனைவர் சி.சுதாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.முத்துலட்சுமி, மேனாள் நிருவாகக் குழு உறுப்பினர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திரு.த.ஆ.கிருஷ்ணசாமி கவுண்டர் என்கிற கிட்டு கவுண்டர், மேனாள் உறுப்பினர், தமிழ்நாடு தென்னை நல வாரியம் திரு.சா.ராஜசேகரன், இணைப் பேராசிரியர், முனைவர் இரா. அருள்பிரகாஷ், உதவி இயக்குநர், திரு. மு.இரகோத்தமன், வேளாண்மை இணை இயக்குநர் திரு.க.வெங்கடேசன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அலுவலர்கள், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டு, 16 தலைப்புகளில் விரைவுத் துலங்கல் குறியீட்டுடன் (QR code) 65 பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல் விளக்க கையேடானது தென்னை விவசாயிகளுக்கு பெரிதும் பயன்தரும் என்று குறிப்பிட்டதோடு, விழாவில் பங்கேற்று சிறப்பித்த அமைச்சர் பெருமக்களுக்கும் துறையினுடைய உயர் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

The post தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வெளியிட்டார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneer Selvam ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Minister of Youth Welfare and Sports Development ,Udayanidhi Stalin ,Agriculture ,Development ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...