×

சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும் வெற்றிகரமாக சென்றடைந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்: நடனமாடி கொண்டாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக நேற்று முன்தினம் விண்வெளிக்குச் சென்றார். பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’-ன் ‘ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பறந்தார். அவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் சென்றார்.தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போயிங் நிறுவனத்தின் ‘ஸ்டார்லைனர்’ விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தநிலையில், 25 மணி நேர பயணத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக 3-வது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணி அளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் சென்றனர். சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூன் 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள். 3-வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, தன்னுடன் விநாயகர் சிலை மற்றும் பகவத் கீதையை கொண்டு சென்றுள்ளார். சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததுமே மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுனிதா வில்லியம்ஸ், அங்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாரம்பரிய முறைப்படி மணி அடித்து, சுனிதா வில்லியம்ஸ் வரவேற்கப்பட்டுள்ளார். பயணம் வெற்றியடைந்ததை குறிப்பிட்டு கூகுரலிட்டவாறு உள்ளே வந்த அவர், நடனமாடியபடியே அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து காற்றில் மிதந்தபடியே மீண்டும் நடனமாடி உற்சாகமடைந்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.குஜராத்தை சேர்ந்த தீபக், சுலோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் 2ம் முறையாக விண்ணை தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். 7 முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும் வெற்றிகரமாக சென்றடைந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்: நடனமாடி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sunitha Williams ,International Space Station ,Washington ,Sunita Williams ,America ,Sunitha ,
× RELATED தொழில்நுட்பக்கோளாறு காரணமாக...