×

சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை திணறடித்த அமெரிக்க அணி வீரர் சௌரப் நெட்ராவல்கர்: 14 வருடங்களுக்கு பிறகு பழி தீர்த்த சம்பவம்

அமெரிக்கா: பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை சாத்தியப்படுத்திய சௌரப் நெட்ராவல்கரை இந்திய ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள். நடப்பு டி20 உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது கத்துக்குட்டியான அமெரிக்கா அணி. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அமெரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய அமெரிக்காவும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அந்த அணியும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 எடுத்ததால் ஆட்டம் டிரா ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆமிரின் சொதப்பலான பந்துவீச்சாள் அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது.

19 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாட அமெரிக்கா தரப்பில் பந்துவீசினார் சௌரப் நெட்ராவல்கர். சிறப்பாக பந்துவீசிய சௌரப் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சௌரப் ஏற்கனவே இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து இருந்தார். சூப்பர் ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்து இருந்தார். விறுவிறுப்பாக சூப்பர் ஓவர் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவ காரணமாக இருந்த சௌரப் நெட்ராவல்கர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர். அத்தோடு மட்டுமல்லாமல் அவர் இந்திய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார் என்ற சுவாரஸ்ய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரை பற்றிதான் தற்போது இணையத்தில் வைரலாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. மும்பையை சேர்ந்தவரான சௌரப் இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சௌரப் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்துள்ளார். ரஞ்சி டிராபி போட்டிகளில் இவர் விளையாடும் போது கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனாகட் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோருடன் சேர்ந்து விளையாடி இருக்கிறார் என்பது ஆச்சர்யமான தகவல். 2010 ஆம் ஆண்டு யு-19 இளையோர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி 9 விக்கெட்டுகளையும் சாய்த்து இருந்தார்.

இதில் ஒரு சோகமான செய்தி என்ன வென்றால் அந்த யு 19 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நூலிழையில் தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசியவர் சௌரப் நெட்ராவல்கர் 5 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அந்தப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாமும் விளையாடி இருந்தார். ஆம், அதே பாபர் அசாம் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியை 14 வருடங்களுக்கு பிறகு பழி தீர்த்துள்ளார் சௌரப். சௌரப் நெட்ராவல்கருக்கு இந்த இடம் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை.

மும்பையை சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான சௌரப் ஓரக்கல் நிறுவனத்தில் வேலை கிடைத்து 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுகிறார். கம்யூட்டர் சயின்ஸ் படித்த அவர் சாஃப்ட் வேர் இஞ்சினியராக பணியாற்றி வந்தார். ஆனாலும் கிரிக்கெட் மீதான அவரது காதல் அவரை விட்டபாடில்லை. அமெரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தன்னுடைய நிரூபித்து வந்துள்ளார். அதனுடைய பலன்தான் அவரை அமெரிக்க அணியில் சேர்த்துள்ளது. 32 வயதான அவர் அமெரிக்காவுக்காக 48 ஒரு நாள் மற்றும் 29 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

The post சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை திணறடித்த அமெரிக்க அணி வீரர் சௌரப் நெட்ராவல்கர்: 14 வருடங்களுக்கு பிறகு பழி தீர்த்த சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Saurabh Netrawalkar ,Pakistan ,Super Over ,USA ,T20 World Cup ,Kathucut ,Dinakaran ,
× RELATED 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின்...