×

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் மின் தேவை குறைந்துள்ளது: அதிகாரிகள் தகவல்

சென்னை: தென்மேற்குப் பருவமழை தொடக்கம் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் தமிழகத்தின் மின் தேவை குறைந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மின்சாரப் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்தாண்டு மார்ச் மாதத்தில் 18,000 மெகாவாட் மின் தேவை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 22ம் தேதி 19,407 மெகாவாட் மின் தேவை பதிவானது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 19,900 மெகாவாட் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் ஏப்.8ம் தேதி 20,125 மெகாவாட் மின் தேவை பதிவானது. 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்து மின் தேவை பதிவானது இதுவே முதல் முறை. மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்ததால் மின்தேவை படிப்படியாக அதிகரித்து, கடந்த மே 2ம் தேதி 20,830 மெகாவாட் மின் தேவை பதிவாகி புதிய உச்சத்தை எட்டியது. இதனையடுத்து மே மாத தொடக்கத்தில் பெய்த கோடை மழை மின்தேவையை சற்று குறைத்தது. இருப்பினும் மே மாத இறுதியில் வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கியதால் மின் தேவையும் அதிகரித்தது. இந்த கூடுதல் மின் தேவையையும் சமாளிக்க மின்வாரியம் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால மாநிலத்தின் மின் தேவை குறைந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின் வாரியத்தில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதல் மாநிலத்தின் மின் தேவையும், மின் நுகர்வும் அதிகரிக்க தொடங்கியது. மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் மின் தேவை மற்றும் நுகர்வு புதிய உச்சங்களை எட்டியது. இந்த கோடையில் தான் தமிழகத்தின் மின் தேவை முதன்முறையாக 20,000 மெகாவாட்டை தாண்டியது. நேற்று முன்தினம் மாநிலத்தின் மின் 15,671 மெகாவாட் ஆக இருந்தது. தென்மேற்குப் பருவமழையின் வருகையாலும், அவ்வப்போது பெய்து வரும் மழையாலும் மின் தேவை குறைந்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஜூன் இறுதி வரை இதே நிலையே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​டெல்டா மாவட்டங்களில், முக்கிய அணைகளில் தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் பலர் இந்த பருவத்தில் சாகுபடியை தவிர்த்து வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கான மின் தேவையும் குறைந்துள்ளது. பொதுவாக, பருவமழையின் போது மின் சுமை 50 சதவீதம் குறையும். வட தமிழகத்தை பொறுத்தவரை வெப்பநிலை கணிசமாகக் குறையாததால் சென்னையின் மின் தேவை அதிகமாகவே உள்ளது. தற்போது, ​​சென்னை நகரில் அதிக மக்கள் தொகை மற்றும் தொழில் நிறுவனங்களால் மின் நுகர்வு 90 முதல் 100 மில்லியன் யூனிட்கள் வரை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் மின் தேவை குறைந்துள்ளது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,monsoon ,CHENNAI ,Electricity Board ,Tamil Nadu ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...