சென்னை: தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை நாடாளுமன்றத்துக்கு 17 புதுமுகங்கள் செல்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதில் 17 புதுமுகங்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைய இருக்கின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் அருண் நேரு (பெரம்பலூர்), முரசொலி (தஞ்சாவூர்), ஆ.மணி (தர்மபுரி), தரணி வேந்தன் (ஆரணி), பிரகாஷ் (ஈரோடு), கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), ராணி ஸ்ரீகுமார் (தென்காசி), மலையரசன் (கள்ளக்குறிச்சி) ஆகிய 9 எம்பிக்களும், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா (மயிலாடுதுறை), ராபர்ட் புரூஸ் (நெல்லை), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்), கோபிநாத் (கிருஷ்ணகிரி), ஆகிய 4 பேரும், மதிமுக சார்பில் துரை வைகோ (திருச்சி), இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜ் (நாகை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம் (திண்டுக்கல்) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாதேஸ்வரன் (நாமக்கல்) ஆகியோரும் நாடாளுமன்றத்தில் புதுமுகங்களாக பதவி ஏற்று பணியாற்ற உள்ளனர். மொத்தத்தில் இவர்கள் 17 பேரும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பிக்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் தமிழ்நாட்டில் இருந்து கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன், சுதா, ராணி ஸ்ரீகுமார் ஆகிய 5 பெண் எம்பிக்களும் நாடாளுமன்றத்துக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post நாடாளுமன்றத்துக்கு செல்லும் 17 புதுமுகங்கள் appeared first on Dinakaran.