×

2019ல் ஆளும்கட்சியாக இருந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை நான் தலைவராக இருக்கும்வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடிக்கும், வேலுமணிக்கும்தான் சண்டை நடக்கிறது; அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கோவை: ‘2019ல் ஆளும்கட்சியாக இருந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை. தமிழக பாஜ தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை. எடப்பாடிக்கும், வேலுமணிக்கும்தான் சண்டை நடந்து வருகிறது’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ எங்களுடன் சேர்ந்து இருந்தால் 35 தொகுதியில் வெற்றி பெற்று இருப்போம் என எஸ்.பி.வேலுமணி கூறுகிறார். இதனை எடப்பாடிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே ஏதோ பிரச்னை இருப்பதாக தெரிகிறது. கடந்த 2019ல் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. அப்போதே அவர்களால் ஒரு சீட் கூட வெற்றி பெறமுடியவில்லை. தற்போது, பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்பது தான் தற்போது நடந்துள்ள தேர்தலின் செய்தி. கோவை சட்டமன்றத்தில் 6 தொகுதியில் 3 தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், எந்த அர்த்தத்தில் எஸ்.பி.வேலுமணி பேசி இருக்கிறார் என தெரியவில்லை. அவர், விரக்தியால் பேசி வருகிறார். பாஜ தற்போது வளர்ந்து கொண்டு இருக்கிறது. பூனை யானையாக மாற கடுமையான பாதையில் செல்ல வேண்டும். அதற்குள் தொண்டர்கள் விபரீதமாக நடந்து கொள்ள வேண்டாம். ஆட்டை நடுவீதியில் கொண்டு வந்து கொடூரமாக வெட்டி சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம். அப்படி வெட்ட வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள். இது தான் என் ஊர். நான் இங்கு தான் இருப்பேன். அண்ணாமலை மேல் கை வைக்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள். ஆடு மேல் கை வைக்க வேண்டாம்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர் இருக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா?. மக்களை எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திப்பேன். வாக்குறுதிகளை நிச்சயம் நடத்தி காட்டுவோம். 10 ஆண்டு காலமாக அதிமுக ஸ்மார்ட் சிட்டி போன்றவற்றில் செய்த ஊழல்களை கையில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.ராதாகிருஷ்ணனை விட குறைவான வாக்குகள் வாங்கியுள்ளதாக எஸ்.பி.வேலுமணி கூறி இருப்பது தவறான புள்ளி விவரம். அவரின் அரசியல் ஞானத்தை அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 2026ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.

எனது செயல்பாடு தான் பாஜ இரட்டை இலக்கு, வளர்ச்சி ஆகும். அதிமுக கோட்டையில் நாங்கள் டெபாசிட் வாங்க உள்ளோம். எங்களால் தான் அதிமுக வாக்கு குறைந்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். யாராலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. முழுமையான கூட்டணி ஆட்சியை பார்க்க போகிறோம். நான் உள்ளவரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை. பாஜ மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்து தான் கூட்டணி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2019ல் ஆளும்கட்சியாக இருந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை நான் தலைவராக இருக்கும்வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடிக்கும், வேலுமணிக்கும்தான் சண்டை நடக்கிறது; அண்ணாமலை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Atamugha ,Zadapaddi ,Velumani ,Annamalai ,Govai ,Tamil ,Nadu ,Aditmuga ,Edapadi ,Goa Airport ,Weadapadit ,Annamalai Bharappu ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு...