×

உடுமலை அருகே பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்

உடுமலை: உடுமலை அருகே பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிஏபி பிரதான கால்வாய் மூலம் 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. பிரதான கால்வாய் அணையில் இருந்து வெள்ளக்கோவில் வரை சுமார் 124 கிமீ தூரத்துக்கு செல்கிறது. இந்த கால்வாயின் கரைகள் பல இடங்களில் உடைந்தும், கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்தும் காணப்படுகிறது.

இதனால் பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. நீர் விரயம் ஆவதால் கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கால்வாயை சீரமைக்க முதல்கட்டமாக ரூ.4.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அணையில் கால்வாய் துவங்கும் இடத்தில் இருந்து 1.5 கிமீ தூரத்துக்கு முதல்கட்டமாக கால்வாயை சீரமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் கால்வாயின் கரைகள் முழுவதுமாக பெயர்த்து எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் தண்ணீர் பாசன நிலத்துக்கு விரைவாக செல்லும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், முழு கால்வாயையும் விரைவாக சீரமைத்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடுமலை அருகே பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Coimbatore ,Tirupur ,Tirumurthy Dam ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு