×

அனுபவத்தை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையெனக் கொள்ளலாகாது

ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவ ஞானி

ஒரு நாள் பிற்பகல் சமயத்தில், என்னைக் காண ஒருவர் வந்தார். தனக்கு வேதாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். அவர் ஆங்கிலம் பேசிய விதத்திலிருந்து நல்லதொரு பல்கலைக் கழகத்தில் படித்தவரென்று ஊகிக்கமுடிந்தது. அறிவுக்கூர்மையுள்ளவர். முந்நாளில் நல்ல வருவாயையுடைய ஒரு பெரிய வக்கீலாக இருந்தாரென்பதை அறிந்தேன். கூர்ந்த கண்களால் நம்மை எடைபோடுபவராகவும், ஒருவிதத்தவிப்பு உள்ளவராகவும் தென்பட்டார்.

மேற்கத்திய மதங்கள் உள்பட பலவும் படித்து அறிந்தவராகக் காணப்பட்டார். நடுத்தர வயதினர். ஒல்லியான உயர்ந்த தேகம், பல வழக்குகளை வெற்றி கண்டதின் தற்பெருமிதம் அவரிடம் காணப்பட்டது. “நீங்கள் பேசுவதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்கள் கூறுவது கலப்படமற்ற வேதாந்தமே. நீங்கள் கூறும் விதம், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இருக்கிறதென்றாலும், அதன் அர்த்தம் பழமையான பரம்பரை கூறுவதேதான்.” என்றார் அவர்.

“நீங்கள் வேதாந்தம் என்று எதைக் குறிக்கிறீர்” என்று நாம் வினவினோம். அதற்கு அவர், “நாங்கள் பிரஹ்மம் ஒன்றே என்றும், அதுவே இவ்வுலகனைத்தையும், அதனுடைய மாயையான தோற்றத்தையும் படைக்கிறதென்றும், தவிர ஒவ்வொரு மனித உள்ளத்தில் உள்ள ஆத்மாவும் பிரஹ்மமே என்றும் அறிகிறோம். எவ்வாறு கனவிலிருந்து விழித்து இந்த நினைவு உலகத்திற்கு வருகிறோமோ அவ்வாறே, அன்றாட உலக நினைவிலிருந்து விடுபடவேண்டும். கனவு காண்பேன், முழுமையான கனவு உலகைப் படைக்கிறான்.

அதுபோன்றே, தனி மனிதன் ஒவ்வொரு வனும் முழுமையான, தன் உருவானஉலகையும், மற்ற மனிதர்களையும் உருவாக்குகிறான், காண்கிறான். நீங்கள் அவ்வாறு கூறாவிட்டாலும், கருத்து என்னவோ, அதுவேதான். ஏனெனில், நீங்கள் பெருமளவில் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் இந்நாட்டில் பிறந்து வளர்ந்து இப்பாரத மண்ணின் பண்பாட்டில் ஊறியவரே.

நீங்கள் அதை ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உங்களைப் படைத்த நாடு இந்த பாரத நாடே. நீங்களும் இந்த மண்ணின் மைந்தனே. உங்கள் மனமும் இந்நாட்டுடையதே. உங்களுடைய செயல்களும், பேசும்போது ஆடாது அசையாது சிலை போன்ற உங்கள் வடிவமும், சொல்லப்போனால், உங்கள் உருவமும் இப்பண்டைய நாட்டின் வழிமுறையிலேயே அமைந்துள்ளது. உங்களுடைய போதனைகளும், தொன்றுதொட்டு நம் முன்னோர் போதித்த உண்மையின் தொடர்சியேயாகும்.” என்று கேள்விக்கு விளக்கம் தந்தார்.

இப்போது, இந்தப் பேச்சாளர் (ஜே.கிருஷ்ணமூர்த்தி தன்னை பேச்சாளர் என்றே படர்க்கையில் – 3rd personல் – குறிப்பிடுகிறார்) இந்திய மரபைச் சேர்ந்தவரா, இந்தியப் பண்பாட்டில் கட்டுண்டவரா என்ற கேள்விகளைச் சற்றே ஒதுக்கி வைப்போம். முதலாவதாக அவர் எந்நாட்டிற்கும் உரியவரன்று. அவர் அந்தண குலத்தில் பிறந்திருந்தாலும், அதற்கும் சொந்தமன்று. நீங்கள் எந்த மரபின் எல்லைக்குள் அவரைத் திணிக்க நினைக்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர் மறுக்கிறார்.

அவர் தன் போதனைகளைத் தொன்மை போதனைகளின் தொடர்ச்சி என்பதையும் மறுக்கிறார். இந்திய அல்லது மேற்கத்திய புனித நூலை எதையும் அவர் படித்ததில்லை. ஏனெனில், உலகில் என்ன நடக்கிறது என்பதை விழிப்புடன் நோக்கும் இந்த பேச்சாளருக்கு (எனக்கு) புனித நூல்கள் என்று சொல்லப்படுவதை படிக்தேவை இல்லை.

இவ்வுலகில், மனிதனது முடிவில்லா தொடர்ந்த கோட்பாடுகளும், ஐந்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக செய்துவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டபிரசாரங்களும் இருந்து வருகிறது. பின்பு அந்த பிரசாரங்களை மரபாக, சத்தியமாக, இறைவெளிப்பாடு என்று கருதுவதே மனிதனின் மனப்பாங்கு.உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த சொற்கள், கொள்கைகள், சின்னங்கள், அதன் வழக்கங்கள் ஆகியவற்றை முழுவதுமாக, பூரணமாக ஒதுக்கி தள்ளிய அவருக்கு சத்தியம் என்பது மற்றவர் வாயால் அறியும் இரண்டாம்தர விஷயமன்று. நீங்கள் அவரது உரைகளை நன்கு கேட்டிருந்தால் தொடக்கத்திலிருந்தே எவ்வித அதிகாரப் பீடத்தையும் ஒப்புக்கொள்வது சத்தியத்திற்கு புறம்பானது என்பதை சொல்லிவருகிறார். கலாச்சாரம், மரபு, சமூக நீதி ஆகியவற்றிலிருந்து வெளியே வந்து, அதை பார்க்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தவிர, இவர் கூறியதை நன்கு கேட்டிருந்தால் ‘இவர் இந்தியர், இந்தியரல்ல; பழைய வேதாந்தத்தைப் புதிய சொற்களால் புனைந்து தருகிறார்’ என்றெல்லாம் கூறமாட்டீர்கள். கடந்த காலத்தையும், அதன் பண்டிதர்களையும், அதன் விளக்கவுரை ஆசிரியர்களையும், கோட்பாடுகளையும், சூத்திரங்களையும் அவர் அடியோடு மறுக்கிறார் என்பதும் தெரியவரும்.

சத்தியம் இறந்த காலத்திலே நிச்சயம் இருப்பதில்லை. இறந்த காலத்திலிருக்கும் சத்தியம் நினைவுக்குவியல்களின் சாம்பல் போன்றதே. நினைவோ காலத்திற்குட்பட்டது. நேற்று எனும் நினைவுச் சாம்பலில் சத்தியம் நிலைக்காது. சத்தியம் உயிர்ப்புள்ளது, காலம் எனும் வரம்பிற்குட்பட்டதல்ல.

இவற்றையெல்லாம் முற்றிலும் ஒதுக்கி தள்ளிவிடுவோம். இப்போது, நீங்கள் முக்கியப்படுத்தும் பிரஹ்மம் எனும் மையப் பிரச்னைக்கு திரும்பவருவோம். நீங்கள் அதை உறுதிபட கூறுவதே, மனம் அதை கற்பனையால் கோட்பாடாக புனையச் செய்கிறது. அக்கோட்பாடு சங்கரருடையதோ, இந்நாளைய சமயவாதியினுடையதோ, எதுவாகிலும் புனையச்செய்வது ஒரு கற்பனையே. ஒரு கோட்பாட்டை ஓர் மனஅனுபவமாக உணர்ந்து அதுதான் உண்மை என்று நீங்கள் சொல்லலாம். அது, ஒரு கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போன ஒருவன் நான் யேசுவை கண்கூடாகப் பார்த்தேன்; கிருஷ்ணன் சம்பிரதாயத்தில் வளர்க்கப்பட்ட ஒருவன் நான் கிருஷ்ணனை பார்த்தேன் என்று சொல்வதற்கு ஒப்பாகும், நிச்சயமாக அதுபோன்ற காட்சிகள் உள்மன கற்பனையின் வெளித்தோற்றமே.

அந்த உள்மனதோ, மரபைச் சார்ந்துள்ள எல்லைக்குட்பட்ட பழக்கங்களால் ஆனவை. அனுபவத்தை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையெனக் கொள்ளலாகாது. இம்மனோமயக் காட்சிகள் யாவும் நாம் வளர்ந்து வந்த நம்பிக்கைச் சூழல்களால் மேன்மேலும் வலுப்படுத்தப்பட்டு அறிவை எல்லைகுட்படுத்தும் பழக்கங்களாகமாற்றுகின்றன. ஆகவே, அவை உண்மையல்ல. நாம் நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் அடிக்கடி வலியுறுத்துவதேன்? காரணம் – அச்சம் – அன்றாட வாழ்க்கையை ஒட்டிய அச்சம், அதன் இழப்பைப் பற்றிய அச்சம், ‘துயரம் நேர்ந்துவிடுமோ’ எனும் அச்சம், இறப்பைக் குறித்துள்ள அச்சம், அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோம் என்ற அச்சம், இவ்வாறு அச்சத்திலேயே வாழ்கிறோம்.

இதைத் தவிர்க்கவேண்டி வலிமை மிகுந்த நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் திறமையாக உண்டாக்கி அவற்றைப் பிரசாரம் செய்கிறோம். பல்லாண்டுகளாக உரம்பெற்ற நம்பிக்கைகள் அறிவின்மையால் உண்மையாகிப் போகின்றன.நீங்கள் ஒருவிதக் கோட்பாட்டையோ, மதத்தையோ உருவாக்காவிட்டால், உள்ளதை உள்ளவாறே காண்பீர். அப்போது, ‘உள்ளது’ என்பது எண்ணம், இன்பம், துன்பம், மரண பயம் என்று தெரியவரும்.

அன்றாட வாழ்க்கையானது ஒருவருடன் ஒருவர் போட்டி, பொறாமை, பேராசை, முன்னேற்றம், பதவி மோகம் என்று அறியும்போது, மதக்கோட்பாடுகள், ரட்சகர், குரு ஆகியவை பயனற்றவை என்பதைப் பார்ப்பீர்கள். மேலும், அப்போது, துயரத்திற்கோர் எல்லை காணவும், எண்ணங்களால் உண்டாக்கப்பட்ட ஒட்டுமொத்த அமைப்பையும் வேருடன் சாய்க்கவும் உங்களால் முடியும். எண்ணங்களால் உண்டாக்கப்பட்ட நமது மன அமைப்பை ஊடுருவி பார்ப்பதும், புரிந்துகொள்வதுமே தியானம். அப்போது, உலகை மனமயக்கமாக பார்க்காமல், ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு வலைகளால் ஆனது இவ்வுலகம் என்ற மறுக்கமுடியாத ஓர் உண்மையாகபார்ப்போம்.

நாம் அறிய வேண்டியது இதுவேயன்றி, வேதாந்த ஆராய்ச்சிகளையோ, சடங்குகளையோ, மதச்சார்பான செயல்களையோ பற்றியது அல்ல. பயம், பொறாமை, துயரம் ஆகிய மனப்பாங்கிலிருந்து விடுதலை அடைந்தவனுடைய உள்ளம் மட்டுமே இயற்கையான அமைதியைக் கொண்டிருக்கும். ஆடாது அசையாத அவ்வுள்ளம், நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியின் உண்மையை பார்ப்பது மட்டுமல்லாமல், அனைத்து பார்வைகளுக்கும் அப்பால் செல்லும். அதன்காரணமாக, காட்சி, காண்பான் என்ற இரட்டை நிலைக்கு ஒரு முடிவு ஏற்படும்.
போராட்டத்திற்கும், அகந்தைக்கும், மன அயர்ச்சிக்கும் அப்பாலுள்ள அது – இதை வெறும் கோட்பாடாக சொல்லவில்லை – அது ஆதியும் அந்தமுமில்லா ஓர் நீரோடை; மனதினால் எட்ட முடியாத அளவீடற்ற ஓர் இயக்கம்.

இதை செவிமடுக்கும்போது, நிச்சயமாக இதையும் ஒரு கோட்பாடாக ஆக்குவோம். அந்த கோட்பாடு உங்களுக்கு பிடித்துவிட்டால் அதையும் பிரசாரம் செய்வீர்கள். நீங்கள் பிரசாரம் செய்யப்படும் அவை உண்மையாகாது. உங்கள் மனதிலும் இதயத்திலும் நிரம்பியுள்ள வேதனை, கவலை, அதிகாரம், ஆதிக்கம் இவற்றிலிருந்து விடுதலை அடையும்போதே சத்தியம் இருக்கும். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போதே, அன்பு எனும் நல்லாசி மலரும்போதே நாம் கூறிவந்ததின் உண்மை புலப்படும்.

தொகுப்பு: லோகேஷ்

 

The post அனுபவத்தை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையெனக் கொள்ளலாகாது appeared first on Dinakaran.

Tags : J. Krishnamurti ,
× RELATED தயாமூலதன்மம்