×
Saravana Stores

வடிவழகிய நம்பி பெருமாள்

நாமெல்லாம் உய்ய ஒரே வழி தந்த ஸ்வாமி ராமானுஜரான எம்பெருமானார் உதித்த அதே சித்திரையில்தான் எம்பெருமானாரே தம் பெருமாள் என்று கொண்ட, கொண்டாடிய வடுக நம்பியை திரு அவதாரம் செய்ய வைத்து, சித்திரை தனக்கு மேலும் சிறப்பு சேர்த்து கொண்டிருக்கிறது. தம் குருவேதான் தனக்கு கடவுள், திருவீதி உலா வரும் திருவரங்கனை கவனிக்காமல் நான் இருந்தாலும் இருப்பேனே தவிர, என் ஆசார்யனுக்காக திருமடைப் பள்ளியில் (சமையலைறையில்) காய்ச்சும் பாலை நான் கவனிக்காமல் விட்டுவிடுவேனா என்ன? என்று கேட்டு வாசலில் வந்த திருவரங்க பெருமாளைக் கூட பாராமல், தம் குருவான ஸ்வாமி ராமானுஜருக்காக தாம் காய்ச்சும் பால் பொங்காமல் இருக்க வேண்டுமே என்று பரிவு பொங்க, திருவரங்கனை பார்க்க வெளியே வராமல், அடுப்பில் இருந்த பாலை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றவர் வடுக நம்பி.

எம்பெருமானின் அருளையும், எம்பெருமானாரின் ஆசியையும் ஒருச்சேரப் பெற்ற பெரும் பாக்கியசாலியான வடுக நம்பி, அவதரித்தது சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் தான். வடுகநம்பி தம் குருவின்மீது வைத்திருந்த அளவுக்கதிக பக்தியையும், மரியாதையையும், பரிவையும் பார்த்துத் தானோ என்னவோ, பெருமாளே வடுக நம்பியின் ரூபத்தில் ராமானுஜர் முன் வந்து நின்ற நிகழ்வை படிக்கும்போதெல்லாம் நம் கண்கள் மெய்சிலிர்த்து கண்ணீரை அந்த சிஷ்யனை சிந்தித்து அவர் தம் திருவடியில் தானாகவே மனக்கண்ணால் சிந்தத்தான் செய்யும். ஒரு முறை ஸ்வாமி ராமானுஜர், திருவனந்தபுரத்தில் இருந்த சமயத்தில், அங்கிருந்தவர்கள் இவரால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி, அவரைக் கொல்லத்துணிந்தனர்.

தன் பக்தனுக்காக தூணிலிருந்து வந்து காத்த அந்த திருமால், திருவனந்தபுரத்திலிருந்து யாரும் அறியா வண்ணம் தன் உடைமையான உடையவரை, இரவோடு இரவாக திருக்குறுங்குடிக்கு மாற்றினான். மறு நாள் காலை புலர்ந்ததும், தான் தாம் இடம் மாறி வந்திருக்கிறோம். இதுவும் அந்த மாதவனின் லீலை என்பதை உணர்ந்து கொண்ட ஸ்வாமி ராமானுஜர், காலை எழுந்ததுமே தாம் கூப்பிடும் வடுக நம்பியின் பெயரைச் சற்றே சத்தம் போட்டுப் கூப்பிட்டுப் பார்த்தார். எப்போதும் தன் கூடவே இருக்கும் வடுகநம்பியை காணாமல் தவித்துப் போய், “வடுகா வடுகா..” என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார், ராமனுஜர். தூரத்திலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்தார் வடுக நம்பியின் வடிவில் பெருமாள்.

நீராடிவிட்டு தன் நெற்றியில் திருமண்ணை இட்டுக் கொண்ட ராமானுஜரைப் பார்த்து வடுக நம்பியும், “ஸ்வாமி, அடியேனுக்கும் தங்கள் திருக்கைகளால் திருமண் காப்பை இட வேண்டும்” என வேண்டி நிற்க, ராமானுஜர் ஆசை ஆசையாக வடுகநம்பிக்கு தன் திருக்கைகளாலேயே திருமண் காப்பினை நெற்றியில் இட்டார். சரி.. கோயிலில் இருக்கும் வடிவழகிய நம்பியைச் சென்று தரிசிப்போம் என்று வேக வேகமாக பகவானின் சந்நதிக்குச் சென்றவர், பெருமாளின் நெற்றியில் ஈரம் கலையாமல் இருந்த திருமண் காப்பை பார்த்து வியப்புற்றார். வியப்புற்றவர் சற்றே திரும்பி, “வடுகா.. வடுகா..” என்று அழைக்க அங்கே வடுக நம்பியை காணவில்லை.

தாம் இட்ட திருமண் காப்பு போலவே பெருமாளின் நெற்றியில் இருப்பதை பார்த்ததும்தான் ராமானுஜருக்கு தெளிய வந்தது, வடுக நம்பியின் வடிவில் வந்தது “வடிவழகிய நம்பி பெருமாள்’’ என்பது. அன்று முதல் வடிவழகிய நம்பி வைஷ்ணவ நம்பி என்ற திருப்பெயரோடு புன்னகைத்துக் கொண்டு இருக்கிறார் திருக்குறுங்குடியில். தமது “ஸ்ரீயதிராஜ வைபவத்தில்”, தனது அந்தரங்க சிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்த ஸ்வாமி ராமானுஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கர்யத்தை நியமித்தருளினார். என்னே ஆச்சரியம்!” என்றே வினயத்தோடு வியக்கிறார் வடுகநம்பி. பெருமாளே வடுக நம்பியாய் வந்தார் என்றால், அந்த வடுக நம்பியின் நிலையை, பெருமையை என்னவென்று சொல்வது!

நளினி சம்பத்குமார்

The post வடிவழகிய நம்பி பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Nambi ,Swami Ramanuja ,Lord ,Emperumanar ,Vaduka Nambi ,Perumal ,
× RELATED திருநெல்வேலி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி