×

அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து நாளை தொடங்க உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவதலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் இராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக கடந்த ஆண்டு 200 பக்தர்களும், நடப்பாண்டில் 300 பக்தர்களும் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், கட்டணமில்லாமல் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை, கந்தக்கோட்டத்தில் கடந்த ஜனவரி 28 அன்று தொடங்கிய முதற்கட்டப் பயணத்தில் 207 மூத்த குடிமக்களும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து மார்ச்-6 அன்று புறப்பட்ட இரண்டாம் கட்ட பயணத்தில் 200 மூத்த குடிமக்களும் பங்கேற்று, அறுபடை வீடு ஆன்மிகப் பயண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை (07.06.2024) திருச்செந்தூரிலிருந்து புறப்பட உள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். இம்மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய படைவீடுகளுக்கு சென்று, வரும் 10ம் தேதி நிறைவடைகிறது.

The post அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : house spiritual journey ,Trichindur ,Ministry of the Foundation ,Chennai ,Toll Free Six House Spiritual Journey ,Hindu Religious Institute ,Subramaniya Swami Temple ,Thiruchendur ,Mansarovar ,Mughtinath ,Hindu Religious Foundation ,Sixth House Spiritual Journey ,Tricendur ,
× RELATED வள்ளியூர் ரயில்வே பாலத்தில்...