×

கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில் கிணற்றில் தூய்மையான குடிநீர்: பழமையானதை சுத்தப்படுத்த மக்கள் முடிவு


கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் இதுவரை உப்பு நீராக மாறாமல் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கிணற்றில் நல்ல தண்ணீர் இருந்து வருவதால், அந்த கிணற்றை சரி செய்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் முதன் முதலாக கும்பாபிஷேகம் செய்வதற்கு திருப்பணி மிகவும் விரைந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதே கோயிலுக்கு சொந்தமான கிணறு ஒன்று கோயில் அருகே உள்ளது. அளக்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்று நீர் உப்பு நீராக மாறி உள்ள நிலையில் அளக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் நிலத்தடி நீர் முழுவதும் உப்பு நீராக மாறிவிட்டது.

அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் அதனை எடுத்து பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் திரௌபதி அம்மன் கோயில் கிணற்றில் உள்ள நீர் மட்டும் இன்றும் நல்ல குடிநீராக இருந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளிலும் உள்ள நீர் உப்பு நீராக மாறியுள்ள நிலையில் இக்கோயிலில் உள்ள கிணற்றில் மட்டும் தண்ணீர் உப்பு நீராக மாறாமல் நல்ல நீராகவே இருந்து வருகிறது. எனவே இந்த கிணற்றில் உடைந்து போன சுற்று சுவரை சரி செய்து கிணற்றை தூர் வாரினால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே கிணற்றை சரி செய்து கிணற்று நீரை எடுத்து பயன்படுத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

எனவே மேலும் கூடுதலாக குடிநீர் கிடைக்கும் வகையில் இந்த கிணற்றை தூர்வாரி சுற்றுச்சுவரை சரி செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனதாக தெரிவித்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் கிணற்று நீர் மட்டும் நன்னீராக இருந்து வருவதால் கிராம மக்கள் இதனை அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

The post கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில் கிணற்றில் தூய்மையான குடிநீர்: பழமையானதை சுத்தப்படுத்த மக்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Draupadi Amman temple ,Kollidam ,Alakudi ,Mayiladuthurai… ,
× RELATED பசும்பலூர் திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா