×

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா, ஓபிஎஸ் முயற்சி: கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா, ஓபிஎஸ் முயற்சி செய்கின்றனர் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளர்களும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வமும் தோல்வியை தழுவினர். அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என்று சசிகலா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில் இன்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி; குழப்பத்தை ஏற்படுத்தவே அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுக்கிறார். அதிமுக தலைவர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரமாகியும் யாரும் சென்றதாக தெரியவில்லை. அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் ஓ.பி.எஸ்.. பாஜகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவை தவறாகப் பேசிய அண்ணாமலை உடன் அமர்ந்த ஓபிஎஸ்க்கு பேசுவதற்கு தகுதி இல்லை. தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, அதிமுக தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது? என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; அண்ணாமலை பொய் சொல்வதில் வல்லவர். தமிழக மக்களின் நலன் கருதியே பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டோம். மக்களவை தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். 2019 தேர்தலில் கூட்டணியில் இருந்த நாங்கள் வாங்கிய வாக்கு 19 சதவீதம் பெற்றோம். தற்போது தனித்து 20.46 சதவீதம் வாங்கி உள்ளோம். அதிமுகவின் வாக்கு சதவீதம் 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இவ்வாறு கூறினார்.

The post அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா, ஓபிஎஸ் முயற்சி: கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : K. B. Munusamy ,Chennai ,Sasikala ,OPS ,Atamuga ,Adimuka ,Palanisamy ,Paneer Selvam ,Ramanathapuram ,
× RELATED பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை...