×

போடிமெட்டு மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்து: பெங்களூரை சேர்ந்தவர் பலி


போடி: போடிமெட்டு மலைச்சாலையில் சென்ற கார் 200 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் பெங்களூரைச் சேர்ந்தவர் பலியானார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் சஞ்சீவிரெட்டி (50). இவர் தனது மனைவி அம்பிகா (42), மகள் கீர்த்திகா (18), மகன் கரண் (11), உறவினர்களான வைஷாலி (18), விஜய் மற்றும் அவரது மனைவி ஹர்ஷா (24) ஆகியோருடன் காரில் குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். அனைத்து சுற்றுலா இடங்களையும் பார்த்துவிட்டு நேற்று மூணாறில் இருந்து போடிமெட்டு மலைச்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர்.

4வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது முன்புறமாக சென்ற வாகனத்தினை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சஞ்சீவிரெட்டி உயிரிழந்தார். அவரது மனைவி அம்பிகா உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த குரங்கணி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 200 அடி பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குரங்கணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரையை சேர்ந்தவர்கள் தப்பினர்


மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (38). இவர் காய்கறிகள், பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கிறார். நேற்றுமாலை கார்த்திக்ராஜா மற்றும் நண்பர்கள் ராம்பிரகாஷ், வைஷ்ணவ் ஆகியோர் காரில் போடிமெட்டு வழியாக கொச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கார் போடிமெட்டு மலைச்சாலையில் 17வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. 3 பேரும் காரில் இருந்து வேகமாக இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குரங்கணி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

The post போடிமெட்டு மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்து: பெங்களூரை சேர்ந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Bodimetu Hill Road Accident ,Bengaluru ,Bangalore ,Bodimetu hill road ,Sanjeevireddy ,Bengaluru, Karnataka ,Ambika ,Keerthika ,Karan ,Podimettu Hill Road ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...