×

அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லாததால் எப்படி இருந்த பாஜ… இப்படி ஆயிடுச்சே… உதயகுமார் கிண்டல்

மதுரை: அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லாததால், ‘எப்படி இருந்த பாஜ, இப்படி ஆயிடுச்சே’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டமாகக் கிண்டலடித்து உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘பாஜவுடன் கூட்டணியை தொடர்ந்திருந்தால் ஒரு இடம் கூட கிடைக்காத இந்த நிலை வந்திருக்காது. பாஜ எடுத்த முடிவு தவறு என்று நினைக்கிறீர்களா?’ என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு உதயகுமார் கூறியதாவது: அதிமுக அன்று தெளிவாக இருந்தது. ராமநாதபுரம் கூட்டத்திலும் அமித்ஷா முன்னிலையிலேயே பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி எனப் பேசினோம்.

இதனை அந்த கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் ஏற்றனர். ஒரே ஒரு தலைவருக்கு (அண்ணாமலை) மட்டும்தான் முரண்பாடு. அவர் யார் என்பது நாடறிந்த ஒன்று. அவரது அனுபவக் குறைவின் காரணமாக இன்றைக்கு எல்லா கட்சிகளுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை பார்க்க முடிகிறது. தேசியக்கட்சியின் மாநிலத்தலைவர் (அண்ணாமலை), பொறுமையை கையாண்டு, பொறுமையுடன் களம் கண்டிருக்கவேண்டும். வாயடக்கத்தோடும், நாவடக்கத்தோடும் இருந்திருக்க வேண்டும்.

டெல்லியில் இன்றைக்கு கூட்டணி கட்சி தயவோடு ஆட்சியமைக்கும் நிலை தான், அதுவும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் 2 கட்சிகளிடம் கேட்காமல் முடிவெடுக்க முடியாத நிலை வந்துள்ளது. நேற்று வரை நீங்கள் எப்படி இருந்தீர்கள்? எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன். ஏன் ஆயிட்டேன்? அவசர கோலத்தில் அள்ளித்தெளித்ததின் காரணமாகத்தான் இந்த நிலை. நுழைய முடியாத கேரளாவில், நடிகர் சுரேஷ்கோபி பிள்ளையார் சுழி போட்டு விட்டார். தமிழகத்தில் அப்படி முடியாது. ஸ்டார் வேட்பாளர்களாக பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், தமிழிசை, அண்ணாமலை, முருகன் என ஒன்றிய அமைச்சராக இருப்போர், வருவோர் எல்லாம் போட்டியிடுகிறீர்கள். நீங்கள் அனைவரும் மண்ணைக் கவ்வும் சூழ்நிலையில் ஏன் மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

* என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… செல்லூர் ராஜூ
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில் ‘விழுந்தால் விதையாய் எழுவோம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில், அதிமுக கொடி படத்துடன், ‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல் வரிகள் ஒலிக்க, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி இருவரும் உருவாக்கி வளர்த்த இயக்கம். விழுந்தாலும் எழும் பீனிக்ஸ் பறவை போல்!!!’ எனப் பதிவிட்டுள்ளார்.

The post அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லாததால் எப்படி இருந்த பாஜ… இப்படி ஆயிடுச்சே… உதயகுமார் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Udayakumar ,BJP ,Annamalai ,Madurai ,Former ,AIADMK ,minister ,Bajja ,Dinakaran ,
× RELATED எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்