×

திமுக கோட்டையானது கொங்கு மண்டலம்

28 ஆண்டுக்கு பிறகு கோவையில் நேரடி வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசியளவில் உற்று நோக்கும் ஸ்டார் தொகுதியாக கோவை இருந்தது. திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில், அக்கட்சியின் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்பட 37 பேர் போட்டியிட்டனர். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இத்தொகுதி தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்க துவங்கியது. கோவையில் அண்ணாமலை மூலம் தேர்தல் பிரசார களத்தை பாஜ பரபரப்பாக்கியது. பூத் கமிட்டிக்குகூட ஆள் இல்லாத நிலையில், தன்னார்வலர்கள் மூலம் ஆன்லைனிலும், ஆப்லைனிலும் பாஜ களம் இறங்கி வேலை பார்த்தது. பிரதமர் மோடியை 3 முறை கோவைக்கு அழைத்து வந்தனர். இதன்மூலம் இத்தொகுதியில் பலமான அதிமுகவை ஓவர்டேக் செய்து, அண்ணாமலை இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

2014 நாடாளுமன்ற தேர்தலிலும் மும்முனை போட்டி நிலவியது. அந்த தேர்தலில் அதிமுக வென்றது. அதன்பிறகு நடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9ஐ அதிமுக கைப்பற்றியது. மீதமுள்ள ஒன்று, அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜவுக்கு சென்றது. இத்தொகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வியூகங்கள் உள்ளிட்ட சில காரணங்களால், அதிமுகவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், அது கடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே பொய்த்து போனது. கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 97 வார்டுகளை திமுக கூட்டணி அள்ளியது. அதில் இருந்தே கோவை திமுக கோட்டையாக மாறியது. தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் இத்தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,89,454 வாக்குகள் பெற்று, அமோக வெற்றி பெற்று கோவை திமுக கோட்டை என நிரூபித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், ஒவ்வொரு முறையும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுக்கே இத்தொகுதியை விட்டுக்கொடுத்து வந்தது. அதிமுகவும் இதே நிலைப்பாட்டை எடுத்து வந்தது. அதன்படி, இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, கம்யூனிஸ்ட் கட்சிகள் 7 முறை, திமுக, பாஜ தலா இரு முறை, அதிமுக ஒருமுறை வென்றுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதாவது, 28 ஆண்டுகளுக்கு பிறகு, இத்தொகுதியில் திமுக நேரடியாக களம் இறங்கி, அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த 1980ல் திமுகவை சேர்ந்த இரா.மோகன், வெற்றி பெற்றிருந்தார். அதன்பின்னர் 1996ல் திமுகவை சேர்ந்த மு.ராமநாதன் வெற்றி பெற்றிருந்தார். அதன்பின்னர் 2024 தேர்தலில் திமுக நேரடி வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக திமுக இத்தொகுதியில் வென்றுள்ளது.

முதன்முறையாக ஈரோட்டை கைப்பற்றியது

திராவிட இயக்கத்தின் தாய்வீடு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண், மஞ்சள் மாநகரம், ஜவுளி சந்தை என பல்வேறு பெருமைகளை கொண்ட ஊராக ஈரோடு விளங்கி வருகிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தமிழ்நாட்டின் 17வது தொகுதி. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட ஈரோடு தொகுதி 1952 மற்றும் 1962 ஆகிய 2 தேர்தல்களுக்கு பின்னர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு திருச்செங்கோடு தொகுதியாக மாறியது. அதன் பிறகு 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம் (தனி), குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இணைத்து மீண்டும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவானது.

தொகுதி சீரமைப்பிற்கு பின்பு 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய 4 பொதுத்தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்தது. 2009ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ல் நடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் செல்லகுமார சின்னையன் வெற்றி பெற்றார். 2019ல் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது 2024ல் திமுக வேட்பாளர் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் ஈரோடு தொகுதியின் முதல் திமுக எம்.பி. என்ற பெயரை கே.இ.பிரகாஷ் பெற்றுள்ளார். ஈரோடு தொகுதியை திமுக கூட்டணி 2வது முறையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் திமுக பெற்றுள்ளது.

பதிவான 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 வாக்குகளில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 5 லட்சத்து 62 ஆயிரத்து 339 வாக்குகளை அதாவது 51.43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 3 லட்சத்து 25 ஆயிரத்து 773 வாக்குகளை அதாவது 29.79 சதவீதம் பெற்றுள்ளார். திமுக, அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஒற்றை இலக்கில் மட்டுமே வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 82 ஆயிரத்து 796 வாக்குகளையும் (7.57 சதவீதம்), பாஜ கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் விஜயகுமார் 77 ஆயிரத்து 911 வாக்குகளையும் (7.13 சதவீதம்) பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் உள்பட 27 வேட்பாளர்களும் 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றனர்.

அதிமுகவை சிதறடித்த சேலம்

தமிழகத்தில் திமுகவின் கோட்டையாக விளங்கிய சேலம் மாவட்டம், கடந்த சில சட்டமன்ற தேர்தல்களில் சிறிய சறுக்கலை சந்தித்தது. குறிப்பாக, கடந்த 2016 மற்றும் 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவின் கை ஓங்கியது. சேலம் தெற்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. தற்போது நடந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 70,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சேலம் வடக்கு தொகுதியில் மட்டும், அதிமுக வேட்பாளர் விக்னேஷைவிட 40,308 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம் தெற்கு தொகுதியில் 24,400 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

முதல் சுற்றின் முடிவில் 279 வாக்குகள் முன்னிலை பெற்ற அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்று வந்தார். சேலம் தெற்கு தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், அங்கு திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 89,177 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 64,777 வாக்குகளும், பாமக வேட்பாளர் அண்ணாதுரை 15,738 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 13,158 வாக்குகளும் பெற்றனர். இதில், திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் தெற்கு தொகுதியில் மட்டும் 24,400 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இதன்மூலம் சேலம் தெற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்கிற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளதாக, திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post திமுக கோட்டையானது கொங்கு மண்டலம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kongu Mandal ,Coimbatore ,Tamil Nadu ,Mayor ,Ganapathi Rajkumar ,AIADMK ,Singhai Ramachandran ,Dinakaran ,
× RELATED கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்...