×

நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக 4வது இடத்துக்கு சென்றது ஏன்? தென் மாவட்டங்களில் மொத்தமாக டெபாசிட் காலியானது எப்படி? பரபரப்பு தகவல்

சென்னை: நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகள் பெற்று அதிமுக 4வது இடத்துக்கு சென்றது ஏன்? தென்மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஓட்டை இழந்தது ஏன்? என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 32 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டது. அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதில், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்து உள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுக வலுவாக இருந்த தொகுதிகளில் டெபாசிட் இழந்தது கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 12 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜ 2ம் இடம் பிடித்து உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி தலைமையில் சந்தித்த 9 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.

இதற்கு முக்கிய காரணமே அதிமுகவில் ஏற்பட்ட பல அணிகள் மற்றும் எடப்பாடியின் சமுதாய ஆதிக்கம்தான் என்று கட்சியினர் குமுறுகின்றனர். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட அதிகார மோதலால் கட்சி நான்காக உடைந்தது. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் என 4 அணிகளாக செயல்பட்டது. குறிப்பாக 4 பேரும் அவரவர் சார்ந்த சமுதாய ஓட்டுக்களை பிரித்தனர். கொங்கு மண்டலத்தில் எடப்பாடி அவர் சார்ந்த சமுதாய பிரதிநிதிகளுக்கே முக்கியத்துவம் தந்தார். கட்சி பதவிகள் மற்றும் தேர்தல்களில் போட்டியிட அவர் சார்ந்த சமுதாயத்தினருக்கே வாய்ப்பு கொடுத்தார். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகிய மூன்று பேரும் சமுதாய ஓட்டுக்களை பிரித்தனர். குறிப்பாக, எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தனித்தனியே களம் கண்டதால் அதிமுக ஓட்டுக்கள் மூன்றாக சிதறின. இதனால்தான் ஓபிஎஸ் தனது சமுதாய வாக்குகள் எங்கு அதிகமாக உள்ளதோ அந்த தொகுதிகளில் சர்வே எடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அங்கு அவருக்கு சமுதாய ஓட்டுக்கள் கை கொடுத்தது. இதனால்தான் அங்கு அதிமுகவை விட மூன்று மடங்கு அதிக வாக்குகளை ஓபிஎஸ் பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. இதேபோல் மாஜி அமைச்சர்கள் உள்ள மதுரை, திண்டுக்கல்லில் அதிமுக மண்ணை கவ்வி உள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் சமுதாய ரீதியாக ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு சென்றன.

அதிமுகவுக்கு கை கொடுப்பதே கொங்கு மண்டலமும், தென் மண்டலமும்தான். இந்த முறை கொங்கு மண்டலம் கை கொடுத்ததால் அங்கு டெபாசிட் இழக்காமல் கவுரவத்தை தக்க வைத்து கொண்டது. ஆனால், தென்மண்டலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்து உள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் வரும். அவ்வாறு கணக்கு பார்த்தால் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகள் சட்டப்பேரவை தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தென்சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் 4வது இடம் கிடைத்து உள்ளது. தென்சென்னையில் ஜெயக்குமாரின் மகனும், அத்தொகுதியின் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன் டெபாசிட் இழந்து உள்ளார். பிரபலத்தின் வாரிசு என்றபோதிலும் ஓட்டு விழவில்லை. இந்த தொகுதியில் அவர் எம்பியாக இருந்தபோது பெரிதாக எதுவும் செய்யவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இன்னொரு பக்கம் ஜெயக்குமார் வாரிசுக்கு கொடுத்ததால் கட்சியினரே அதிருப்தியில் வேலை செய்யவில்லை. வேலூரில் கடந்த அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை பாஜ கூட்டணியில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். அவர் அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்து 2வது இடத்தை பிடித்து உள்ளார்.

புதுச்சேரியில் அதிமுகவுக்கு 4வது இடம் கிடைத்து உள்ளது. இங்கு பதிவான 8,07,724 வாக்குகளில் 25,165 வாக்குகள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைத்து உள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, நெல்லையில் டெபாசிட் இழந்து 4வது இடத்துக்கு அதிமுக சென்றுள்ளது. குமரியில் 2014ல் 3வது இடத்துக்கு வந்த அதிமுக இந்த முறை அது கூட வரவில்லை. நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளே அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவினர் பலர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதியில் அதிமுக ஓட்டுக்கள் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் சென்று உள்ளது. நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்குகள் வாங்கியதால், இந்த சமயத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒட்டு மொத்த பொறுப்பாளர்களையும் தூக்கி அடித்து இருப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஆதாரங்களுடன் புகார் அளித்த பின்னரும் நிர்வாகிகள் சிலரை மாற்றம் செய்யாமல் உள்ளார். மாவட்ட பொறுப்புகளில் இருந்து சம்பாதித்தவர்கள் கட்சிக்கு துரோகம் செய்ய தொடங்கி விட்டனர். இன்னும் நிர்வாகிகளை மாற்றாமல், கட்சியை நடத்தினால் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி தான் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக 4வது இடத்துக்கு சென்றது ஏன்? தென் மாவட்டங்களில் மொத்தமாக டெபாசிட் காலியானது எப்படி? பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Naam Tamil Party ,Chennai ,ADMK ,Nam Tamil Party ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் தனித்து போட்டி