×

15 ஆண்டுக்கு பின் நெல்லையை மீண்டும் கைப்பற்றியது காங்கிரஸ்

நெல்லை: நெல்லை மக்களவை தொகுதியை 2009க்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் தற்போது கைப்பற்றியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு நெல்லை மக்களவை தொகுதி, பாளையங்கோட்டை, நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்ளிட்ட 6 தொகுதிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. நெல்லை மக்களவை தொகுதி இதுவரை 18 நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. இதில் 7 முறை அதிமுகவும், 5 முறை காங்கிரஸ், 2 முறை திமுக, தலா ஒருமுறை இந்திய கம்யூனிஸ்டு, சுதந்திரா கட்சிகளும் வென்றுள்ளன. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் நெல்லை தொகுதியில் 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2004ல் இத்தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனுஷ்கோடி ஆதித்தனும், 2009ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராமசுப்புவும் தொடர்ச்சியாக வெற்றிக்கனியை பறித்தனர். அதன்பின் 15 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் சார்பில் தற்ேபாது போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2014ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட பிரபாகரனும், 2019ல் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியமும் வெற்றி பெற்று எம்.பி.க்களாக இருந்தனர். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொகுதியில் போட்டியிட மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசிற்கு வாய்ப்பு கிட்டியது. வெளிமாவட்ட வேட்பாளர், தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி, திமுக கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் வேட்பாளர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 21 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 15 ஆண்டுக்கு பின் நெல்லை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

The post 15 ஆண்டுக்கு பின் நெல்லையை மீண்டும் கைப்பற்றியது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Nellai ,Nellai Lok Sabha ,Nellai Lok Sabha Constituency ,Palayangottai ,Ambasamudram ,Nanguneri ,Radhapuram ,Tenkasi District Alankulam.… ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரணத்தில் திடீர்...