- கலகலர்
- சிவன்
- மெலங்கோட்
- சிவாலய ஓட்டா
- சிவராத்திரி
- குமாரி மாவட்டம்
- பத்மநாபபுரம்
- நாகர்கோவில்
- திருவனந்தபுரம்
- குமரகோயில் முருகன் கோயில்
- Sivaratri
குமரி மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி நடக்கும் சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடைய 12 கோயில்களில் 8வது திருத்தலம் மேலாங்கோடு காலகாலர் (சிவன்) கோயில் ஆகும். பத்மநாபபுரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இடம் பெற்றுள்ளது. நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் குமாரகோயில் முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையில் 2 கி.மீ தூரத்தில் மேலாங்கோடு உள்ளது. அங்கு அக்கா – தங்கை என்று 2 இசக்கி கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் நடுவே இடம் பெற்றுள்ளது இந்த சிவன் கோயில். அதுவும் அக்கா ேகாயிலையொட்டி அமைந்துள்ளது என்றும் கூறலாம்.சுற்றிலும் பச்சைப்பசேல் என்று வயல்வெளிகள், வாழைத்தோப்புகள், நீர்நிலைகள் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ளது இத்திருத்தலம். மேலாங்கோடு கோயில் இசக்கி கோயில்களுடன் ெதாடர்புடையது என்பதால் இந்த சிவன் மேலாங்கோடு சிவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த திருத்தலம் சிவன் – மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படும் தலம் ஆகும். மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனை நோக்கி அவர் தவமிருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதும் என்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு அழைத்தார்.குழந்தை வளர்ந்தது. 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கியபோது சிவன் கோயிலினுள் நுழைந்து மார்க்கண்டேயன் லிங்கத்தை பிடித்தார். எமன் பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. சிவன் சூலத்தால் எமனை குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். இதனால் சிவன் காலனின் காலன் என்று அழைக்கப்பட்டார். அந்த திருநாமத்தில் மேலாங்கோடு சிவன் ‘காலகாலர்’ என அழைக்கப்படுகிறார்.இக்கோயிலுக்கு மேற்கு திசையில் தோரண வாயில் உண்டு. சிறு புதிய கட்டுமானம் ஆகும். இவ்வாசல் வழியாக மேற்கு பிரகாரத்தில் நுழைந்தால் காவு போன்ற தோற்றத்தை காணலாம். மேற்கு பிரகாரம் வழி சென்று கிழக்கு வாசல் செல்ல வேண்டும். வெளிப்பிரகாரம் மேற்கூரையின்றி காணப்படுகிறது.
கிழக்கு வெளிப்பிரகார வாசலில் பலிபீடம் உள்ளது. இதையடுத்து சிறிய முன்மண்டபம் கல்லால் ஆனது. ஸ்ரீகோயில் திறந்த வெளிகள் பிரகாரங்களையும், சுற்று மண்டபத்தையும் கொண்டது. உட்பிரகாரத்தின் தென் கிழக்கில் மடப்பள்ளி, ஸ்ரீகோயில், நந்தி மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற 3 பகுதிகளை கொண்டது. கருவறை மேல் விமானம் உள்ளது. இக்கோயில் உட்கோயில் கட்டுமானப்படி கிபி 15-16ம் நூற்றாண்டு காலத்தில் உள்ளது என்று கூறலாம். கருவறை மூலவர் ‘காலகாலர்’ என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையில் இருக்கிறார். லிங்கவடிவம் 60 செ.மீ உயரம். லிங்கத்தின் உச்சிப்பகுதி சற்று குவிந்த வடிவில் உள்ளது. உட்பிகாரம் தென்மேற்கில் விநாயகர் இருக்கிறார். மேலும் நாகர், பூதத்தான் உருவங்கள் வெளிப்பிரகாரத்தில் உள்ளன.
காலை 6 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு 6.50க்கு நிர்மால்ய பூஜை, 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30க்கு சாயராட்சை, இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படும். மகா சிவராத்திரி விழா மட்டுமே இக்கோயிலுக்குரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.நேர்ச்சைக்காக வெடி வழிபாடு இங்கு நடப்பது சிறப்பு ஆகும். நாகர்கோவிலில் இருந்து பஸ்சில் புறப்பட்டு குமாரகோவில் சந்திப்பு வந்து சேர்ந்து, அங்கிருந்து ஆட்டோவில் கோயில் வரை செல்லலாம். இக்கோயிலுக்கு செல்ல மேற்கு திசையில் ஒரே பாதை மட்டுமே உள்ளது.
The post சிவராத்திரியில் அருளும் மேலாங்கோடு காலகாலர் appeared first on Dinakaran.