×

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக சந்தித்த 9வது தேர்தல் தோல்வி: சோர்வடைந்த தொண்டர்கள்!!

சென்னை : ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக 9 தோல்விகளை சந்தித்துள்ளது. 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன்பிறகு கட்சி உடைந்தது. எடப்பாடி தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரானார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல், தற்போது 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என அனைத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதுபோன்ற தொடர் தோல்விகளால் அதிமுக தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் என 9 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

அதன்படி,

*2017ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.

*2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.

*அந்த தேர்தலுடன் நடந்த 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

*2020ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வி.

* 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.

*2021ம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வி முகம்

*2022ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி

*2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.

*இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

The post ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக சந்தித்த 9வது தேர்தல் தோல்வி: சோர்வடைந்த தொண்டர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Jayalalithaa ,AIADMK ,election ,Chennai ,Jayalalitha ,General Secretary ,Chief Minister ,Edappadi ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...