×

கேரளாவில் 18 தொகுதிகளை காங். கூட்டணி கைப்பற்றியது

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இடதுசாரி மற்றும் பாஜ கூட்டணி தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோஷலிஸ்ட் மற்றும் கேரளா காங்கிரஸ் (ஜே) தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ 16 தொகுதிகளிலும், பிடிஜேஎஸ் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. திருவனந்தபுரம், ஆற்றிங்கல், திருச்சூர் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜ கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளை கைப்பற்றியது. இடதுசாரி கூட்டணியால் ஆலப்புழா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எனவே இந்தத் தேர்தலில் குறைந்தது 12 தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இடதுசாரி கூட்டணி பல முக்கிய தலைவர்களை களம் இறக்கியது. ஒரு அமைச்சர், 4 முன்னாள் அமைச்சர்கள், 2 எம்எல்ஏக்கள், 1 பொலிட் பீரோ உறுப்பினர் என முக்கிய தலைவர்கள் நிறுத்தப்பட்டனர்.

கடந்த முறை கைநழுவிப் போன ஒரு தொகுதியையும் இம்முறை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பிரமுகர்கள் போட்டியிட்டனர். இந்த முறை கேரளாவில் எப்படியாவது கணக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜ சார்பிலும் முக்கிய பிரமுகர்கள் நிறுத்தப்பட்டனர். பெரும் பரபரப்புக்கு இடையே நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்தது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா, கேரளாவில் தனது முதல் கணக்கை தொடங்கியது .பா.ஜ., வேட்பாளர் சுரேஷ்கோபி திருச்சூரில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் இடதுசாரி கூட்டணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. ஆலத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.

* கேரளாவில் கணக்கை தொடங்கிய பாஜ
கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாமல் இருந்தது. இரண்டு முறை திருவனந்தபுரத்தில் மட்டும் இரண்டாவது இடத்திற்கு மட்டுமே வரமுடிந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்த போதிலும் பாஜவால் இதுவரை கேரளாவில் வெற்றிக்கனியை பறிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இம்முறை சுரேஷ் கோபி மூலம் கேரளாவில் பாஜ தங்களுடைய கணக்கை தொடங்கியுள்ளது.

* இந்தியாவிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர்
18வது மக்களவை தேர்தலில் அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகிபுல் உசேன் 10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார். அவர் 14,65,602 ஓட்டு பெற்றார். அவரை எதிர்த்த அகில இந்திய ஒற்றுமை ஜனநாயக அணி வேட்பாளர் முகமது அஜ்மல் வேட்பாளர் 4,57,821 ஓட்டு மட்டுமே பெற்றார். இதனால் ராகிபுல் உசேன் சாதனை வெற்றி பெற்றார். மபி முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு 8,21,408 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் 11.16 லட்சம் வாக்கு பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் சர்மா 2,95,052 வாக்குகள் மட்டுமே பெற்றார். குஜராத் மாநிலம் நவசாரய் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ மாநில தலைவர் சி.ஆர் பட்டேல் 7.73 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 7.44 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் காந்திநகர் தொகுதியில் வென்றார்.

48 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்
மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனாவின் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டதில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவின் ரவீந்திரதத்தாராம் வைக்கர் 48 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் 4,52,644 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா உத்தவ் பிரிவு வேட்பாளர் அமோல் கஜானன் கீர்த்திகார் 4,52,596 ஓட்டு பெற்றார்.

The post கேரளாவில் 18 தொகுதிகளை காங். கூட்டணி கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : Congress ,Kerala ,Thiruvananthapuram ,Congress alliance ,Left ,BJP alliance ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பள்ளம் தோண்டியபோது...