×

புதுவையில் சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய பாஜ அமைச்சர்: வீடு இருக்கும் பூத்திலும் பேரிடி

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் தற்போதைய அமைச்சரான நமச்சிவாயம் நீண்ட இழுபறிக்குபின் களமிறக்கப்பட்டார். பாஜவில் போட்டியிட அக்கட்சி 3, 4 நபர்களை தேர்ந்தெடுத்த நிலையில் அனைவரும் தோல்வி பயத்தால் பின்வாங்கியதால் கடைசியாக நமச்சிவாயத்தை தலைமை போட்டியிடுமாறு வற்புறுத்தியது. தலைமையின் உத்தரவை ஏற்று போட்டியிடுவதாக நமச்சிவாயமும் அறிவித்து தேர்தல் களம் கண்டார். அவர் தனது அமைச்சர் பதவியைகூட ராஜினாமா செய்யாமல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து எண்ணப்பட்ட ஏனாமில் பாஜ வேட்பாளர் நமச்சிவாயம் முன்னிலை பெற்றார். 2 சுற்று முடிவுகளின்படி வாக்கு வித்தியாசம் பாஜவைவிட காங்கிரஸ் 70 ஆயிரத்துக்கும் மேலாக உயர்ந்தது. இதனால் பாஜ தோல்வி உறுதியானது. அதிலும் அமைச்சர் நமச்சிவாயத்தின் சொந்த சட்டமன்ற தொகுதியான மண்ணாடிப்பட்டில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பெற்ற வாக்குகளை விட 595 வாக்குகள் பின்தங்கியது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் வசிக்கும் வில்லியனூர் வி.மணவெளி பூத்தில் 58 வாக்குகள் குறைவாக பெற்றதும் பேரிடியாக அமைந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, வைத்திலிங்கம் டெபாசிட்கூட வாங்க மாட்டார்… ஏனென்றால் கடந்த தேர்தலில் அவர்கூட இருந்தவர்களில் ஏகேடி, ஜான்குமார், மல்லாடி, சிவக்கொழுந்து, நான் உள்ளிட்ட யாரும் தற்போது இல்லை… என கடுமையாக விமர்சித்து நமச்சிவாயம் அளித்த பேட்டி நேற்று சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பாஜவை கலாய்த்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

The post புதுவையில் சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய பாஜ அமைச்சர்: வீடு இருக்கும் பூத்திலும் பேரிடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Puduvai ,Puducherry ,Namachivayam ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணி ஆட்சி விரைவில் கலைந்துவிடும்: நாராயணசாமி நம்பிக்கை