×

மத்திய சென்னை தொகுதியில் 4வது முறையாக தயாநிதி மாறன் வெற்றி: பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 2,44,689 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளரை விட 2 லட்சத்து 44,689 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சென்னையின் முக்கிய பகுதிகளா விளங்கும் தலைமை செயலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், துறைமுகம் உள்ளிட்டவை இந்த தொகுதிக்குள் வருகிறது. இங்கு மொத்தம் 13,16,603 வாக்காளர்கள் உள்ளனர். 6,62,925 பெண் வாக்காளர்கள், 6,53,358 ஆண் வாக்காளர்கள், 20 பேர் மூன்றாம் பாலினத்தவர். 1996ம் ஆண்வு முதல் இங்கு திமுகவின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன் 1996, 1998, 2001 என தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்ற தொகுதி இது.

முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் திமுக சார்பில் தயாநிதி மாறன் 2006, 2009, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஒன்றிய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம், ஜவுளித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2014ம் ஆண்டு மட்டுமே இங்கு அதிமுக வெற்றி பெற்றது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த அனைத்து தொகுதிகளையும் திமுக மொத்தமாக கைப்பற்றியது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் தயாநிதி மாறன் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, பாஜ சார்பில் வினோஜ் பி செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 7,26,794 வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார். மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரவு, இறுதி சுற்று நிறைவடைந்தது. இதில், தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகள் பெற்றார்.

அவரை அடுத்த வந்த பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்றார். 3வது இடத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகளும், 4வதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 46,031 வாக்குகளும் பெற்றனர். நோட்டா 11,163. இதன் மூலம் தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளரை தோற்கடித்து தனது வெற்றியை பதிவு செய்தார். திமுக வெற்றி பெற்றதையடுத்து, லயோலா கல்லூரி வளாகத்தில் குழுமியிருந்த திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வெற்றிக்கு குறித்து தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி. 2019ம் ஆண்டு முதல் எங்களது கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய அளவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதி முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுவோம். தமிழகத்தில் திமுகவே இருக்காது, திராவிடக் கட்சியே இருக்காது எனப் பேசினார்கள். ஆனால் நாங்கள் நாகரிகமான அரசியலை செய்து வருகிறோம். அதனால்தான் மக்கள் எங்களுக்கு மீண்டும் மிகப்பெரும் வாய்ப்பை அளித்துள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post மத்திய சென்னை தொகுதியில் 4வது முறையாக தயாநிதி மாறன் வெற்றி: பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 2,44,689 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Central Chennai Constituency ,BJP ,Vinoj P Selvam ,Chennai ,DMK ,Madhya Chennai Constituency ,Madhya Chennai ,Parliamentary Constituency… ,
× RELATED வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் : தயாநிதி மாறன் சாடல்