×

அண்ணாமலை, எல்.முருகன், ஓபிஎஸ், டிடிவி, ராதிகா, தமிழிசை என தமிழ்நாட்டில் மண்ணை கவ்விய விஐபிக்கள்

சென்னை: அண்ணாமலை, எல்.முருகன், ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல விஐபிக்கள் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். பாஜ கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாமக கட்சி தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா திமுக வேட்பாளர் ஆ.மணியிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது பாமகவுக்கு மிகப்பெரிய சரிவாகவே காணப்படுகிறது. தற்போதைய பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டார்.

அந்த தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கருதினர். ஆனால் நயினார் நாகேந்திரன் 2,79,239 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அவருக்கு எதிராக போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சுமார் 4.20 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியில் முதல்வராகவும் இருந்தார். உட்கட்சி பிரச்னையால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் அதிமுக கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே பாஜ கூட்டணிக்கு பன்னீர்செல்வம் ஆதரவாக இருந்தார். அதிமுக – பாஜ கூட்டணி முறிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். இந்த தேர்தலில் பாஜ கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். இவரும் வெற்றி பெற்றால் அமைச்சராகி விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியிடம் தோல்வி அடைந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார்.

பாஜ முன்னாள் தமிழக மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவிடம் சுமார் 2 லட்சம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் தோல்வி அடைந்தார். அவர் நீலகிரி தொகுதியில் 2வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். கிருஷ்ணசாமி ஏற்கனவே 1998, 1999, 204, 2009, 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தென்காசியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 7 முறையாக அவர் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் அதிமுக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவருக்கு கூட்டணியில் இடம் கொடுக்கப்படவில்லை. பின்னர் மன்சூர்அலிகான் சுயேட்சை வேட்பாளராக வேலூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவில், நோட்டோவுக்கும் குறைவான வாக்குகளை மன்சூர்அலிகான் பெற்றுள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் பாஜ கூட்டணியில் சேர்ந்து தாமரை சின்னத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தொகுதியில் 3வது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சுமார் 2.5 லட்சம் வாக்குகள் பெற்றார். தேவநாதன் சுமார் 1 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.

பாஜ கூட்டணியில் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட்டார். தேனி தொகுதியில் ஏற்கனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திராத் மகன் போட்டியிட்டு 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி அந்த தொகுதியை டிடிவி பெற்றார். ஆனால் தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பெற்ற வாக்குகளைவிட சுமார் 1.20 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று 2வது இடத்தைப் பிடித்து தோல்வி அடைந்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பாஜ கூட்டணியில் தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 2,11,738 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆகியோர் தலா சுமார் 1 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர்.
பாஜ கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் களத்தில் இறக்கப்பட்டார். இரண்டு பேருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் பட்சத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று கருத்து நிலவியது. ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தைவிட சுமார் 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

தமிழக பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழியிடம் படுதோல்வி அடைந்தார். பின்னர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக பதவி வகித்தார். ஆனாலும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றால் அமைச்சராகி விடலாம் என்ற கனவில், கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னை தொகுதியில் பாஜ வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.

தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோன்று, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் 3வது இடம் பிடித்து படுதோல்வி அடைந்தார். பாஜ சார்பில் வடசென்னையில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் பால் கனகராஜ் போட்டியிட்டார். இவர் அந்த தொகுதியில் 3வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜ கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு 2வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்று முழக்கமிட்டார். ஆனால் கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வி அடைந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கு திமுக வேட்பாளர் வெற்றிவாகை சூடினார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டார்.

அதேபோன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கட்சியை கலைத்துவிட்டு பாஜவில் ஐக்கியம் ஆனார். அதன் பலனாக, விருதுநகர் தொகுதி சரத்குமார் மனைவி ராதிகாவுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் ராதிகா 3வது இடத்தை பிடித்து படுதோல்வி அடைந்தார். விஜய பிரபாகரன் 2வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டார். கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை பாஜ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்து தோல்வி அடைந்தார். பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு சுமார் 4.23 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாரிவேந்தர் 1.13 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று இதே அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், தற்போது அதே அளவில் வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளார்.

The post அண்ணாமலை, எல்.முருகன், ஓபிஎஸ், டிடிவி, ராதிகா, தமிழிசை என தமிழ்நாட்டில் மண்ணை கவ்விய விஐபிக்கள் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,L. Murugan ,OPS ,DTV ,Radhika ,Tamil Nadu ,Chennai ,Paneer Selvam ,Radhika Sarathkumar ,Saumiya Dimuka ,Bhamaka ,Anbumani ,Dharmapuri ,Baja ,
× RELATED அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி: தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்