×

தமிழ்நாட்டில் படு தோல்வி அண்ணாமலையின் பதவியை பறிக்க திட்டம்?

சென்னை: தமிழகத்தில் பாஜவின் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியை பறிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜ தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அமமுக, தமாகா, பாமக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜ 19 தொகுதியில் போட்டியிட்டது. மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் பாஜ இரண்டாம் இடத்துக்கு வந்தது. மற்ற தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. ஒன்றியத்தில் ஆட்சி செய்தும், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்கள் என்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் எந்த கட்சியும் வைக்காத அளவுக்கு தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தும் ஒரு சீட் கூட வாங்க முடியவில்லையே என்று பாஜவினர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அண்ணாமலை மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். வேட்பாளர் தேர்வில் இருந்து அனைத்திலும் அண்ணாமலை தோல்வி அடைந்து விட்டார். அவர் தொகுதியில் மட்டுமே முழு வீச்சில் தேர்தல் பணியில் அவர் ஈடுபட்டார். அப்படி வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருந்து வந்தார். மற்ற தொகுதிகளில் அவரை ஒரு பொருட்டாக கூட எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை வைக்க தொடங்கியுள்ளனர். மேலும் கட்சி மேலிடம் தேர்தல் செலவுக்கு அளித்த பணம் கடைகோடி தொண்டன் வரை செல்லவில்லை. மேல் மட்டம் அளவில் பணத்தை அபகரித்து விட்டனர் என்று பாஜவின் தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.

இது தொடர்பாக மோதல் ஏற்கனவே பல இடங்களில் வெடித்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் போஸ்டர் யுத்தங்கள் வெடித்தது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அண்ணாமலையின் வாயால் தான் வெற்றி பறிபோனது. எனவே, தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பாஜ தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் இப்போதே பாஜவுக்குள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி தலைமையும் பாஜ தலைவர் அண்ணாமலை தான் அதிமுகவை கூட்டணிக்குள் வர விடாமல் தடுத்தார் என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இதுபோன்ற காரணங்களால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் படு தோல்வி அண்ணாமலையின் பதவியை பறிக்க திட்டம்? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Annamalai ,CHENNAI ,BJP ,Delhi ,New Justice Party ,IJK ,Indian People's Education Development Association ,Tamil Nadu People ,
× RELATED இன்று பாஜக மையக்குழு கூட்டம்