×

சுற்றுலா தலமாகும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்

*அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் : சுற்றுலா தலமாகும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலய பகுதியை 2 துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஊத்துக்குளி அருகே சுமார் 310 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. இதுவரை 189 பறவை இனங்கள் வந்துள்ளன.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்த குளத்திற்கு பல வருடங்களாக வருகை புரிவதால் பறவையின் பாதுகாப்பு, சுற்றுலா ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 2022 ஆம் ஆண்டு நஞ்சராயன்குளம் ஆனது தமிழ்நாட்டின் 17 வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. எனவே இங்கு வேட்டையாடுதல், பறவைகளுக்கு தீங்கு விளைவித்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல், தீ வைத்தல், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை போடுதல், அத்துமீறி நுழைதல், மது அருந்துதல் மற்றும் ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதனை கண்காணிக்கவும், குளத்தில் பறவைகள் பாதுகாப்பிற்காகவும் வனத்துறை மூலம் பறவைகள் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வனத்துறையின் மூலம் சோதனைச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக நஞ்சராயன் குளம் பகுதியை சுற்றி எல்லைகள் வரையறுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள நிலத்தில் உரிமைகள் குறித்து ஏதேனும் ஆட்சேபனை தொடர்பாகவும், நில எல்லைகளை வரையறுக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா மேம்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் பகுதியை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் ஆனது. திருப்பூர் மாநகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரையில் திருப்பூர் மாநகரத்தை சுற்றி பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இடங்கள் அதிக அளவில் இல்லை. தற்போது ஆண்டிப்பாளையம் குளம் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஆண்டிபாளையம் சுற்றுலா தளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதுபோல நஞ்சராயன் குளம் பகுதியிலும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக வனத்துறையின் சார்பில் 7.5 கோடி மதிப்பீட்டில் திட்டக் கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துருவின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் நஞ்சராயன் குளம் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட கருத்துருவில் குளப்பகுதியை சுற்றி வேலி அமைத்தல், வரவேற்பு நுழைவு வாயில், நடைபாதை, தகவல் விளக்க கூடம், ஆவண மையம், நுழைவு சீட்டு வழங்கும் இடம், சூழல் வணிக வளாகம், புத்துணர்வு மையம்,சிறிய திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் பூங்கா, கண்காணிப்பு கோபுரம், சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் பறவைகள் மர வீடு அமைப்பு தங்குமிடம், குடிநீர் வசதி ,கழிவறை வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

வனத்துறை மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட கருத்துருவில் மேற்கண்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்துவதற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டால் வனத்துறையானது, சுற்றுலா துறைக்கு கருத்துரு சமர்ப்பிக்கும் பட்சத்தில் மேற்கண்ட பணிகளை செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கீட்டு சுற்றுலா துறை மூலம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதம் தோறும் சுமார் 5000 சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தினால் உள்ளூர் பொதுமக்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறப்பான சுற்றுலாத்தலமாக நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் அமையும். மேலும் இங்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்தப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி அடையும் போது இங்குள்ள மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் திருப்பூர் பகுதிக்கு சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பறவைகளை பற்றி பல்வேறு விஷயங்களை கற்கும் இடமாக மாறும். இவ்வாறு மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தெரிவித்தார். அப்போது வனச்சரக அலுவலர் சுரேஷ், திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் குளோபல் பூபதி, திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி சங்க நிர்வாகிகள் நவீன், சந்தோஷ் , திருப்பூர் இயற்கை கழகத்தின் நிர்வாகிகள், நஞ்சராயன்குளம் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post சுற்றுலா தலமாகும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் appeared first on Dinakaran.

Tags : Nanjarayan ,Pool ,Bird ,Sanctuary ,Tiruppur ,Nanjrayan Pond Bird Sanctuary ,Nanjarayan Pond ,Oothakuli ,Nanjarayan Pool Bird Sanctuary ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!!