×

பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து சாவு

காலாப்பட்டு, ஜூன் 4: காலாப்பட்டு அரசு பள்ளியில் நள்ளிரவில் பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு இசிஆர் சாலையில் செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுபற்றி பள்ளி ஊழியரான பிள்ளைசாவடியை சேர்ந்த கவுதமன் (56) பார்த்து திடுக்கிட்டு, காலாப்பட்டு போலீசுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த பள்ளி அறையில் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. ஆனால் பள்ளியில் இரவு காவலாளி இல்லை. இதனை நோட்டமிட்ட மர்ம நபர், பள்ளியில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக உள்ளே புகுந்துள்ளார். மேலே கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து பலியாகி இருக்கலாம் என தெரியவந்தது. அல்லது வேறு ஏதாவது காரணமா? இறந்த யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலாப்பட்டு அரசு பள்ளியில் இரவில் பொருட்களை திருட முயன்ற மர்ம நபர், தவறி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Kalapattu ,Kalapattu government school ,Sewaliye Chellan Government Higher Secondary School ,ECR Road, Kalapattu, Puducherry ,
× RELATED புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய...