×

கல்பாக்கம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது இருளர் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40), இவரது மனைவி பார்வதி (33). இருளர் இன தம்பதியான இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பார்வதி மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பார்வதி தனது தாயார் வீடான வாயலூரில் வசித்து வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான பார்வதிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சை வரவழைத்து, ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தவாறே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே பார்வதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் தாய்க்கும், சேய்க்கும் தேவையான அடிப்படை சிகிச்சைக்காக சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செவிலியருக்கு பாராட்டு: ஆம்புலன்சில் குழந்தை பிறந்த பின் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் சேயை மேல் சிகிச்சைக்காக ஆயப்பாக்கம் கிராம செவிலியர் சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார்.

அப்போது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் எதற்கும் காசு இல்லாமல் திண்டாடுவதை பார்த்த செவிலியர் சத்யா, நீங்கள் காசுக்காக எதற்கும் கவலைப்பட வேண்டாம் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று தனது சொந்த செலவில் பார்வதி மட்டுமின்றி அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தும், துணிமணிகள் வாங்கிக் கொடுத்தும், செலவுக்கு காசு கொடுத்தும் உதவினார். இதானால் பார்வதி குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் செவிலியர் சத்யாவுக்கு மன மகிழ்வுடன் நன்றி தெரிவித்து, பாராட்டு தெரிவித்தனர்.

The post கல்பாக்கம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Kalpakkam ,Thirukkalukkunram ,Kumar ,Parvathi ,Ayappakkam ,
× RELATED செங்கல்பட்டு புதிய பேருந்து...