திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களுள் 26வது திருத்தலம். இத்திருத்தலம், பஞ்சரங்க தலங்களில் ஒன்று.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது. முற்காலத்தில் இந்த இடம் சுகந்தவனமாக இருந்ததால், மூலவர் ‘பரிமள ரங்கநாதன்’ என்று அழைக்கப்படுகின்றார்.
திருமங்கை ஆழ்வார் இங்கே பாடிய விதம் வித்தியாசமானது. எப்பொழுதும் பெருமாளைப் புகழ்ந்து பாடுவதையே கேட்ட இந்த தலத்துப் பெருமாள், திருமங்கை ஆழ்வாரோடு சற்று விளையாடிப் பார்க்க நினைத்தார். அதனால், திருமங்கையாழ்வாரோடு ஊடல் கொண்டு, தம்மைத்தமிழால் வைது (திட்டி) பிரபந்தம் பாடுவார் என்று எண்ணினார்.,திருமங்கை ஆழ்வார் ஆசையாக இவரைச் சேவிக்க வந்த பொழுது, கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. சந்நதிக் கதவுகள் மூடப் பட்டதைக் கண்டவுடன், ஆழ்வார் துடித்தார்.
“உம்மை கண்ணார பார்க்க
வேண்டும் என்று எத்தனை ஆசையாக வந்தேன், நீ இப்படிக் கோயில் கதவை சாத்திக் கொண்டாயே,
உன்னை நான் எப்படிப் பார்ப்பது?’’ என்று துடித்துப் போய் பாடுகிறார்;
“நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,
எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,
நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே?’’
“உன்னைத் தொழுதோம். உனக்கே பணி செய்திருக்கும் அடியார்கள் நாங்கள்.
கொஞ்சம் மனமிரங்கி எங்களைப்பார்த்தால் என்ன?’’
“பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,
மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்
ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்
ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே’’.
“நீ முகம் கொடுக்கவில்லை. சரிதான். ஆனால், பெருமாள் தன்னுடைய பக்தர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது அல்லவா, அந்த நம்பிக்கை போய்விட்டதே. இப்பொழுது பார். பெருமாள் மீது ஆசை கொண்டு, ஆழ்வார் ஓடி வந்தார். அவரைக் கண்டு கொள்ளாமல் பெருமாள் கதவைச் சாத்திக் கொண்டார், பெருமாளை நம்பினால்
இப்படித்தான் என்று அயலார் சொல்ல மாட்டார்களா? அவர்கள் ஏசும்படி நீ நடந்து கொள்ளலாமா’’?
``ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,
காசி னொளியில் திகழும் வண்ணம்
காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர், இந்த ளூரீர், வாழ்ந்தே போம் நீரே’’.
“நான் இவ்வளவு சொல்லியும் நீ உன்னுடைய திரு சேவையை எனக்குக் காட்டவில்லையா, சரி.. சரி.. உன்னுடைய அழகும் உன்னுடைய காட்சியும் உன்னோடு இருக்கட்டும். நீரே வாழ்ந்துபோம். உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டவர்களுக்காக ஏற்பட்டது என்று நினைத்திருந்தோம்; அப் படியன்றாகில், உம்முடம்பை நீரே கண்டுகொண்டு, நீரே தொட்டுக்கொண்டு, நீரே மோந்துகொண்டு, நீரே கட்டிக்கொண்டு நீரே வாழ்ந்துபோம்’’.
“தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமானாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்
கேயெம் பெருமானல்லீ ரோநீர் இந்த ளூரீரே’’.
“ஆனால் ஒன்று, நீ என்னை வெறுத்தாலும்கூட, எங்களுக்கு நீதான் பெருமாள். தாயும் தந்தையும் நீதான். அதனால், எல்லா அடியாரைப்போல என்னையும் நீர் நினைத்துவிட வேண்டாம். எத்தனையோ பேர் கோயிலுக்கு வந்தாலும், எல்லா பக்தர்களும் நாங்களும் ஒன்றா? அவர்கள் காமியார்த்தமாக உன்னிடம் பெறுவதற்காக வருகின்றார்கள். உம்மைப்பார்ப்பதையும், உனக்கு தொண்டு செய்வதையும், பல்லாண்டு பாடுவதையும் தவிர வேறு அறியாதவர்கள் நாங்கள்.
அப்படிப்பட்ட எமக்கு உன்னுடைய திருச்சேவையை காட்டாவிட்டால் அது சரியாக இருக்காது’’. இப்படி வரிசையாக அற்புதமான தமிழில் அசதி ஆடல் (அதாவது திட்டுவது போல வாழ்த்துதல்) என்கிற பாணியில் அருமையான தமிழில் ஒரு பதிகம் பாடுகின்றார் திருமங்கையாழ்வார். பகவானுக்கு இந்தத் தமிழ் கேட்டு மகிழ்ச்சி. அப்படி பெருமாள் தமிழால் மகிழ்ந்தஅருமையான தலம் இந்தத் தலம்.
“சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே! மருவினிய
மைந்தா! அம் தண் ஆலி மாலே! சோலை மழ களிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு
இறையும் இரங்காயே!’’
வரிசையாக பெருமாளை அழைத்து, “என் தந்தையே கொஞ்சம் என் மேல் இரக்கம் கொள்ளக் கூடாதா?” என்று கேட்கிறார். சந்திர பரிகார தலங்கள் நிறைய உண்டு. அதில் ஒரு தலம் காவிரிக் கரையின் கடைசிப் பகுதியில், மாயவரத்து அருகிலுள்ள திருஇந்தளூர். இந்தளூர் என்பது மாயவரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியாகும். மாயவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய ஆட்டோக்களும் உண்டு.
மணல்மேடு என்ற ஊருக்குச் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி கோயில் சந்நதித் தெருவில் இறங்கிக் கொள்ளலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து இறங்கிச் செல்லும் போது ஒரு வசதி உண்டு. துலா ஸ்நானம் என்று சொல்லப்படுகின்ற காவேரிப் படித்துறை, உற்சவ மண்டபங்கள், பார்த்துக் கொண்டே செல்லலாம். காவேரிப் படித்துறையில், ஐப்பசி மாதம் முழுக்க, காவிரியில் நீராடி, பரிமளரங்கனைச் சேவிப்பார்கள்.
கார்த்திகை மாதம் முதல் நாளும், இந்த துலாஸ்நானம் உண்டு. அதற்கு “முடவன் முழுக்கு” என்று பெயர். சந்நதித் தெருவில் கோயிலுக்குப் போகும் பாதையில் இடதுபுறம் உள்ள புஷ்கரணிக்கு “இந்து புஷ்கரணி” என்று பெயர். சந்திரன் தன் மாமனார் தட்சனிடம் சாபத்தினால் பெற்ற தொழு நோயை, இந்தத் தீர்த்தத்தில் நீராடியும், தீர்த்தக்கரையில் தவமிருந்தும் போக்கிக் கொண்டான் என்பது தலபுராணம். பகல் நேரத்தில் இந்த புஷ்கரணியில் கோபுரபிம்பம் விழுந்து அற்புதமாகத் தெரியும்.
சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி, அவருக்கு நலம் செய்த பெருமாள், அந்தச் சந்திரனால் ஒருவருக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்களையும் நீக்கி, அற்புதங்களைத் தருவார் என்பதால், இத்தலம் சந்திர தோஷ நிவர்த்திக்கான திருத்தலமாகும். பிரதான கோபுரம் வழியாகக் கோயிலில் நுழைவோம். அம்பரீஷ மகாராஜாவினால் கட்டப்பட்ட அற்புதமான கோயில். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயிலான இத்தலத்தில், பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக தல வரலாறு கூறுகிறது. பெருமாளின் தலை அருகே காவிரித் தாயாரும், திருவடி அருகே கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும் அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள்.
திருமதில் எல்லாமே செங்கற்களால் கட்டப்பட்டு, பிறகு செய்யப்பட்ட திருப்பணிகளில், கருங்கற்களாக மாற்றியிருக்கிறார்கள். மண்டபங்கள் அழகாகவும் விசாலமாகவும் இருக்கும். கொடிமரத்திற்கு முன் உள்ள தூண்களில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள் வீர சயனத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். இவருடைய திருநாமம் மருவினிய மைந்தன் என்கின்ற அழகான பெயர். பெருமாளின் சயன சுகம் அவருடையதிருமுகத்தில் தெரியும்.
காவிரி, கங்கை இருவருமே தெற்கிலும் வடக்கிலுமாக இருந்து பெருமாளை வணங்குகிறார்கள். கங்கை போன்ற பெருமையைப் பெற வேண்டும் என்று நினைத்த காவேரி, இந்த இடத்தில் தவம் செய்தாளாம். பெருமாள் காவிரிக்கு அற்புதமான வரத்தைத் தந்தாராம். “பொதுவாக எல்லா பாவங்களும் தீர கங்கா ஸ்நானம் செய்வார்கள். அந்த கங்கையின் பாவம் தீர, ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்வாள்’’. இதுதான் பெருமாள் கொடுத்த வரம். தன் பாவத்தை எங்கே தீர்த்துக் கொள்வது என்று தவித்த கங்கைக்கும், இதில் நிம்மதி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்லவா? எனவே, கங்கையின் பாவத்தை போக்கும் பெருமையைக் காவிரி பெற்றது. ஆழ்வார் பாசுரம் இந்தப் பெருமையை விவரிக்கின்றது.
“கங்கையில் புனிதமாய காவிரி” நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும், பூம் பொழில் அரங்கம் தன்னுள்,
எங்கள் மால், இறைவன் ஈசன், கிடந்தோர் கிடக்கை கண்டும்,
எங்கனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே!’’
– என்று காவிரி சிறப்பு பற்றிச்ொல்லுகின்றார்.
திருமாலுக்கு, “பரிமள ரங்கநாதர்” என்று பெயர் வந்ததற்கும் காரணம் இருக்கிறது. மது, கைடபர் என்ற அசுரர்கள் ஒரு காலத்தில் பிரம்மனிடமிருந்து வேதத்தை அபகரித்து ஒளித்து விடுகிறார்கள். அதனால், நான்முகன் உயிர்களைப் படைக்கும் உணர்வின்றி கிடக்கிறார். தேவர்கள், பெருமானிடம் வேதத்தை மீட்டுத் தர வேண்டுகோள் விடுக்கின்றார்கள். திருமால், மச்ச அவதாரம் எடுத்து, வேதங்களை மீட்கிறார். அசுரர்களால் அழுக்கான இடத்தில் மறைக்கப்பட்டதால், துர் வாசனை நீங்க என்ன செய்வது என்று யோசித்தன வேதங்கள். மணம் பெற வேண்டும் என்பதற்காக காவிரியில் நீராடி, பெருமாளை நோக்கித் தவம் இயற்றின. அவர்கள் முன்தோன்றிய பெருமாள், வேதங்களின் மனக் குறையைப் போக்கி, பரிமளம் வீசச் செய்ததால், பரிமள ரங்கநாதர் என்ற பெயரைப் பெற்றார்.
வேதங்களின் குறையைத் தீர்த்ததால், கோயிலின் விமானம் “வேத சக்கர விமானம்’’ என்ற பெயருடன் விளங்குகிறது. இந்த விமானத்தை ஒரு நிமிடம் சிந்தித்தால்கூட, ஆயிரம் அஸ்வமேத யாகங்களின் பலம் சித்திக்கும். தல புராணங்களின் நூறாவது ஏகாதசி விரதம் முடித்தால், அம்பரீசனுக்கு தேவலோகப் பதவிகூட கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், மானிடனுக்கு அப்பதவி கிடைத்தால் தேவர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினர்.
இதனால், தேவர்கள் துர்வாச முனிவரிடம் முறையிட்டனர். துர்வாச முனிவரும், அம்பரீசனின் விரதத்தைத் தடுக்கும் பொருட்டு பூலோகத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். (துவாதசி பாரணை) அப்படி செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் முழுப்பயன் அவனுக்குக் கிடைக்கும். அம்பரீசன், துவாதசி பாரணைக்கு தயாராக இருந்த சமயத்தில், துர்வாச முனிவர் உள்ளே நுழைந்தார். முனிவர் வந்ததால் அவரையும் உணவருந்த அழைத்தான் அம்பரீசன். முனிவரும் அதற்கு சம்மதித்து, நதியில் நீராடிவிட்டு வருவதாக கூறிச் சென்றார். நீண்ட நேரம் முனிவர் வராததை நினைத்து கவலை அடைந்தான் அம்பரீசன். வேதியர்களிடமும் அந்தணர் களிடம் கலந்து ஆலோசித்தான்.
துவாதசி முடிய இன்னும் சில மணித் துளிகளே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால், விரதம் முடிந்து ஏகாதசி விரதத்தின் முழுப் பயனும் கிடைத்துவிடும் என்ற ஆலோசனையின் பேரில், அவ்வாறு செய்து, தன் விரதத்தை பூர்த்தி செய்து, முனிவருடன் உணவருந்தக் காத்திருந்தான் அம்பரீசன். இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த
துர்வாச முனிவர், மிகவும் கோபம் அடைந்தார். ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன் இச்செயலுக்கு அஞ்சி, பரிமள ரங்கநாதரிடம் சரண் புகுந்தான். பெருமாள்மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார்.
அனைத்துச் சம்பவங்களையும் அறிந்த துர்வாச முனிவர், பெருமாளிடம் மன்னித்து அருள வேண்ட, பெருமாளும் மன்னித்தருளினார். பின்பு, நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த அம்பரீசனிடம், “வேண்டியதைக் கேள்” என்றார் பெருமாள். அம்பரீசனும், “தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிய வேண்டும்” என்று வேண்ட, பெருமாளும் அவ்வண்ணமே இத்தலத்தில் வீற்றிருந்துஅருள்பாலித்து வருகிறார்.
வெளிப் பிராகாரத்தில், ராமருக்கு தனி சந்நதி இருக்கிறது. கோயிலுக்கு நேர் எதிரில் ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் கோயில் கொண்டு அருளுகின்றார். இந்த ஆஞ்சநேயரை வணங்காமல் வரக் கூடாது. மகாவரப்பிரசாதி. சந்நதித் தெருவில் ஒரு நாற்கால் மண்டபம் உண்டு. பெருமாளுக்கு வீதி புறப்பாடு நடக்கும் பொழுது திருவந்திக்காப்பு இங்குதான் நடக்கும். சந்திர சாபம் தீர்த்த இந்து புஷ்கரணியில் நடக்கக்கூடிய தெப்ப உற்சவம், அதி அற்புதமாக இருக்கும். இரவெல்லாம் சுவாமி தெப்பத்தில் வர, ஆயிரக் கணக்கான மக்கள், புஷ்கரணியைச் சுற்றி நின்று, கோலாகலமாக சுவாமி தரிசனம் செய்வதும், நாதஸ்வரம், பாட்டுக்கச்சேரி நடப்பதும், அற்புதமாக இருக்கும். தாயாருக்கு, பரிமள ரங்கநாயகி என்று பெயர்.
சந்திரனின் சாபம் தீர்த்த தாயார், “சந்திர சாப விமோசனவல்லி” என்ற திருநாமத்தோடு விளங்குகின்றாள். தாயாரின்திருமுகத்தை ஒரே ஒரு முறை பார்த்தாலும்கூட, ஆயிரம் சந்திர பிரகாசத்தைப் பார்த்ததுபோல ஜொலிக்கும். தாயாரை தரிசிப்பதன் மூலமாக சந்திரனால் கிடைக்கக் கூடிய யோகங்கள் அற்புதமாக வேலை செய்யும். தோஷங்கள் முற்றிலுமாக நீங்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சந்திரனின் சகோதரி அல்லவா தாயார்!
கைமேல் பலன்கள்
* இங்கே பெருமாளை சேவித்தால், அவர்களுக்கு சந்திரனால் ஏற்படுகின்ற தோஷம் நீங்கி மனம் தெளிவடையும்.
* சந்திரன், தாய்க்கு உரிய கிரகம் என்பதால், தாய்க்கு ஏற்படுகின்ற குறைகளும் நீங்கிவிடும்.
* பெருமாளுக்கு அருகில் காலதேவன் இருப்பதால், ஆயுள் குற்றங்களும் நீங்கும். உற்சவமூர்த்தி அழகாக இருப்பார். ஸ்ரீதேவி – பூதேவி உபயநாச்சிமார்களோடு எழுந்தருளியிருக்கிறார்.
* மகப்பேறு இல்லாதவர்களின் மனக் குறையைத தீர்க்க சந்தான கோபாலன் சந்நதியில் எழுந்தருளியிருக்கிறார்.
விழாக்கள்
* சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு
* ஆவணியில் ஐந்து நாள் கண்ணன்புறப்பாடு
* புரட்டாசி மாதத்தில் தாயாருக்குநவராத்திரி உற்சவம்
* ஐப்பசி மாதத்தில் மிகவும் விசேஷமாக பிரம்மோற்சவம்
* மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம்
* பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம்.
முனைவர் ஸ்ரீராம்
The post இந்தளூர் பெருமானே, கொஞ்சம் மனமிரங்கி எங்களைப் பார்த்தால் என்ன? appeared first on Dinakaran.