×

முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம்

சிவகங்கை, ஜூன் 3: முத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை பயன்படுத்திய 36 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் ஆணைய உத்தரவின்படி, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில், அலுவலர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் மறு முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள் 5, மறுமுத்திரையிடப்படாத சோதனை எடைகற்கள் 6, தரப்படுத்தப்படாத எடையளவுகள் 3 என மொத்தம் 14 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மறுபரிசீலனை சான்றினை காட்சிக்கு வைக்காத நிறுவனங்கள் 9 மற்றும் சோதனை எடைகற்கள் பராமரிக்காத நிறுவனங்கள் 13 என மொத்தம் 36 நிறுவனங்கள் மீது சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

எவ்வித சான்றுரைகளும் இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த 3 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

எனவே, எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னணு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை வைத்திருக்கவும் வேண்டும். பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், நிகர எடை, அதிகபட்ச சில்லரை விலை, தயாரிப்பாளரின் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Collector ,Asha Ajith ,Labor Commission ,Labor Assistant Commissioner ,Muthu ,
× RELATED ஜவுளித்துறையில் பயிற்சி பெற வாய்ப்பு