×

கோடையிலும் தண்ணீர் நிரம்பிய கிணறு

 

மேலூர், ஜூன் 3: வெயில் காலங்களில் தண்ணீர் வற்றி, வறண்ட நிலையில் காணப்படும் கிணறுகளின் மத்தியில் தண்ணீர் நிரம்பி, மறுகால் பாயும் கிணற்றை பார்ப்பது ரம்மியமாக உள்ளது. கோடை காலங்களில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான வயல் வெளி கிணறுகள் தண்ணீர் வற்றி, பாறைகள் தெரியும் அளவில் தான் இருக்கும். பெரியாறு வைகை பாசன தண்ணீர் வந்தாலோ அல்லது புயல் வெள்ளம் வந்தால் மட்டுமே கிணறுகளில் தற்போது தண்ணீர் ஓரளவு காணும் நிலை உள்ளது.

ஆனால் இந்த கொளுத்தும் கோடை காலத்தில், தற்போது பெய்த மழையின் காரணமாக மேலூர் சூரக்குண்டு மாத்திக் கண்மாய் அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில், தண்ணீர் தளும்பி நிற்கிறது. இதில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுவதில்லை. கிணற்றின் மேல்மட்டம் வரை தண்ணீர் உள்ளதால், பக்கவாட்டில் கிணற்றில் அமைக்கப்பட்ட ஓட்டை வழியாகவே தண்ணீர் வயலுக்கு பாய்ந்து கொண்டுள்ளது.

கண்மாய் நிறைந்தால் மறுகால் பாய்வது போல், கிணற்றில் நீர் நிறைந்தாலும் மறுகால் பாயும் என்பது இதன் மூலம் தெரிகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதால் கிணறுகளில் தண்ணீருக்கு பதில் பாறைகளை மட்டுமே பார்த்த கண்களுக்கு தண்ணீர் நிறைந்த கிணற்றை பார்ப்பது ரம்மியமாக உள்ளது.

The post கோடையிலும் தண்ணீர் நிரம்பிய கிணறு appeared first on Dinakaran.

Tags : Melur ,Kottampatti ,Dinakaran ,
× RELATED மேலூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்