×

வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.375ல் 3 வேளை உணவு: தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் பணம் கட்டினர்

சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது பணியாற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு 375 ரூபாயில் 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. இதற்கான பணத்தை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் கட்டினர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களின் சார்பில் பூத் ஏஜெண்டுகள் என்ற முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் பணி மிக முக்கியமானதாகும்.

வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களாக பணியாற்றக்கூடியவர்கள் வெளியில் இருந்து உணவு எதையும் எடுத்து செல்லக்கூடாது. அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை(செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு காலை டிபன் வழங்கப்படும். இதில் இனிப்பு, ஒரு இட்லி, பொங்கல், ஊத்தாப்பம் ஒன்று, சாம்பார், சட்னி, டீ, தண்ணீர் பாட்டில் அடங்கும்.

இதன் விலை ரூ.160. காலை 11.30 மணிக்கு டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்படும். இதன் விலை ரூ.25. மதியம் 12.30 மணிக்கு மதிய சாப்பாடு வழங்கப்படும். மதியம் சாப்பாட்டில் இனிப்பு, ஒரு சப்பாத்தி, சாம்பார் சாதம், வெஜிடபுள் பிரியாணி, தயிர் சாதம், ஊறுகாய், வடகம், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். இதன் விலை ரூ.160. மாலை 4 மணிக்கு டீ மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.

இதன் விலை ரூ.30. இந்த மெனுக்கள் அடிப்படையில் 3 வேளையும் உணவு வழங்கப்படும். இதன்படி ஒருவருக்கு 3 வேளையும் உணவு கட்டணமாக ரூ.375 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் பணத்தை கட்டி டோக்கன்களை பெற்று கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து முகவர்களின் உணவுக்கான பணத்தை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கட்டினார்கள்.

The post வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.375ல் 3 வேளை உணவு: தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் பணம் கட்டினர் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,CHENNAI ,Dinakaran ,
× RELATED நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு