×

இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு பாதை அமைத்தீர்கள்; பயணத்தை தொடர்கிறோம்: உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை

சென்னை: இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு. தலைவரே பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம். உழைப்போம், உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை சூட்டியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

தலைவரென்பார், தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் – அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் – நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை பெயரும் தந்தார்- என்று கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.

தலைவர்களுக்கெல்லாம் தலைவர், முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர், கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர், நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி, இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழர்க்கெல்லாம் குடும்பத் தலைவர், இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி- முத்தமிழறிஞர் – தமிழினத் தலைவர் கலைஞர். சூல் கொண்ட நாள் ஜூன் 3. அதிலும் 2024ம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவராம் கலைஞருக்கு நூற்றாண்டு. எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே.

அவர் ஆண்ட ஆண்டும் – வாழ்ந்த ஆண்டும் மட்டுமல்ல – எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே. வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு விடிவெள்ளியாய் தோன்றி- வாழும் காலத்தில் ஒளிதரும் உதயசூரியனாக வாழ்ந்து-நிறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர்தான் தலைவர் கலைஞர். கலைஞர் என்பவர் ஒருவரல்ல. ஓருருவத்தில் வாழ்ந்த பல உருவம் கலைஞர். அரசியலா? ஐம்பது ஆண்டுகாலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். ஐந்து முறை தாய் தமிழ்நாட்டின் முதல்வர்.

சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார்; எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். திரையுலகமா? கதை எழுதினார்; கதை வசனம் எழுதினார்; பாடல்கள் எழுதினார்; திரைப்படங்களை தயாரித்தார். நாடக மேடையா? நாடகங்களை தயாரித்தார்; கதை வசனம் எழுதினார்; நடிக்கவும் செய்தார். பத்திரிகை உலகமா? பத்திரிகையை நடத்தினார். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார். எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கினார். இலக்கியமா?

கவிஞர் – சிறுகதை ஆசிரியர் – நாவலாசிரியர் – உரையாசிரியர் என அனைத்திலும் முத்திரை பதித்தார். அதனால்தான் ஓருருவத்தில் வாழ்ந்த பல உருவம் கலைஞர் என்று சொன்னேன்! அவர்தான் இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார். இன்று நாம் பார்க்கும் எத்தனையோ திட்டங்கள் – சட்டங்கள் – சலுகைகள் – உரிமைகள் – கொடைகள் – வளர்ச்சிகள் – உயர்வுகள் – ஏற்றங்கள் – மலர்ச்சிகள் – மறுமலர்ச்சிகள் – புத்தாக்கங்கள் – நிறுவனங்கள் – பள்ளிகள் – கல்லூரிகள் – மருத்துவக் கல்லூரிகள் – பல்கலைக்கழகங்கள் என பலதும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை. அவர் துளி மையால் விளைந்தவை.

வியர்வை சிந்தி இந்த இனத்துக்காக உழைத்தார். ஒரு துளி மையில் இந்த மாநிலத்தை வளர்த்தார். அதனால்தான் நிறைவாழ்க்கைக்குப் பிறகும் நினைவுகூரப்படுகிறார். புகழால் அல்ல – செயலால் மறக்க முடியாத தலைவர் அவர். அதிகாரத்தால் அல்ல – அன்பால் போற்றப்படும் தலைவர் அவர். ‘அன்பார்ந்த ….’ என்று சொல்லத் தொடங்கியதும் லட்சக்கணக்கான தொண்டர்களின் உடலில் மின்சாரம் பாய்கிறது என்றால்…. ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே’ என்று விளிக்கும் போது உடல் முழுவதும் ரத்தமாற்றம் நடக்கிறது என்றால்…

அவர் அஞ்சுகத்தாயின் மைந்தன் மட்டுமல்ல தமிழ்த்தாயின் புதல்வன் அல்லவா? 95 ஆண்டுகள் தமிழ்நாட்டை காலால் அளந்தவர். தோளால் சுமந்தவர். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றியவர். தமிழ்நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும் அவர் கல்வெட்டு இல்லாத ஊர் இல்லை. அவர் சொல்வெட்டு கேட்காத மனிதரில்லை. அவர் சொற்செட்டு படிக்காத ஆளில்லை. எல்லாரையும் ஈர்த்த எல்லார்க்குமான தலைவர் அவர்.

தமிழ்நாட்டின் நம்பிக்கைத் தீபமான அவருக்கு, நமது நன்றியின் அடையாளமாக மதுரையில் நூலகம் அமைத்தோம். சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை கட்டினோம். திருவாரூரில் கோட்டம் கண்டோம். அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம் உருவாக்கினோம். சென்னையின் நுழைவாயிலில் பேருந்து முனையம் கட்டினோம். வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தென்றலின் தாலாட்டில் ஓய்வெடுத்து வரும் தலைவருக்கு உலகமே வியந்து பார்க்கும் நினைவகம் நிலைநாட்டினோம்.

இவை அனைத்துக்கும் மேலாக திராவிட மாடல் ஆட்சியை கலைஞரின் புகழுக்கே காணிக்கை ஆக்கினோம். கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு இணையாக இந்த இருபதாம் நூற்றாண்டில் யாருமில்லை என்று நிரூபிக்கும் வகையில், சொல்லால்-செயலால்- உழைப்பால்-உண்மையால் – செயல்பட்டு வரும் எங்களுக்கு உங்களது வாழ்த்துகள் வேண்டும் தலைவரே. உங்கள் வாழ்த்துதான் எங்களை உற்சாகமாக உழைக்கச் செய்யும். அந்த உழைப்பு தாய்த்தமிழ் நாட்டை வளர்த்தெடுக்கும்.

முன்பொரு நாள் நீங்கள் எழுதினீர்கள்… “என் மகனே, நீயும் தோளில் பலம் உள்ளவரையில் பகையைச் சாடு, பரணி பாடு, இது உன் தாய்த் திருநாடு – என்று எழுதினீர்கள். அப்படித்தான் என்னையும் இந்த நாட்டுக்காக ஒப்படைத்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
பெரியாரின் பிள்ளைகள் நாம் பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம் -என்றீர்கள். அப்படித்தான் நாங்களும் செயல்பட்டு வருகிறோம். தலைவர் கலைஞரே! நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை, உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன்.

* நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் நீங்கள்.. எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் நாங்களும் வென்று காட்டி இருக்கிறோம்.

* நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி நீங்கள்.. அந்த நவீன தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயர்த்திக் காட்டி வருகிறோம் நாங்கள்.

* இந்தியாவின் திசையைத் தீர்மானித்தவர் நீங்கள்.. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் நாங்கள்.

* உலகுக்கு தமிழ்நாடு வழிகாட்ட வேண்டும் என்று சொன்னீர்கள் நீங்கள்.. உலக நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம் நாங்கள்.

* மகளிர் மனங்களில் மகிழ்ச்சியின் விளையாட்டு..மாணவ மாணவியர் உள்ளங்களில் உணர்ச்சியின் தாலாட்டு … விவசாயிகளின் எண்ணங்களில் பசுமையின் நீராட்டு …. மொத்தத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சியின் புகழ்ப்பாட்டு… – இதுதானே நீங்கள் கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாடு. அதை நாங்கள் உருவாக்கிக் காட்டி வருகிறோம்.

* தலைவரே நீங்கள் நினைத்தீர்கள். நாங்கள் செய்து காட்டி வருகிறோம்.

* நீங்கள் பாதை அமைத்தீர்கள். நாங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.

* நீங்கள் இயக்குகிறீர்கள். நாங்கள் நடக்கிறோம்.

* உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம். உழைப்போம், உழைப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு பாதை அமைத்தீர்கள்; பயணத்தை தொடர்கிறோம்: உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை appeared first on Dinakaran.

Tags : CM M.K.Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,DMK ,President ,Tamil ,Nadu ,CM M.K.Stal ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...