×

பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்: 2வது சுற்றில் போபண்ணா ஜோடி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 4வது சுற்றில் ரஷ்யாவின் அனஸ்டசியா போடபோவாவுடன் (23 வயது, 41வது ரேங்க்) மோதிய இகா ஸ்வியாடெக் (23 வயது, போலந்து) அதிரடியாக விளையாடி 6-0, 6-0 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி வெறும் 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃப் (20 வயது, 3வது ரேங்க்) 6-1, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் எலிசபெத்தா காக்சியரெட்டோவை (23 வயது, 51வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி நேரத்துக்கு நீடித்தது.

செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ரூசோவா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் ஓல்கா டானிலோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கிரீஸ் நட்சத்திரம் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 3-6, 7-6 (7-4), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி (2வது ரேங்க்) 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் ஆர்னால்டோ லஸ் – மார்செலோ ஸார்மேன் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது.

 

The post பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்: 2வது சுற்றில் போபண்ணா ஜோடி appeared first on Dinakaran.

Tags : Sviatek ,French Open ,Bopanna ,Paris ,Ika Sviatek ,French Open Grand Slam ,Iga ,Russia ,Anastasia Podabova ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை