×

அனைத்து வழிகாட்டுதல்களையும் முறைப்படி பின்பற்ற வேண்டும் வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர். இதில், காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, எந்தவித விதிமீறல்களும் இருக்கக் கூடாது. தேர்தல்ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் முன் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு, அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் கூறுகையில், , பொதுத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி தலைவர்கள், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வருவது இது மூன்றாவது முறையாகும். வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் கூறுகிறது. ஆனால், இந்த நடைமுறை அண்மை காலங்களில் மீறப்படுகிறது.

எனவே தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் விவரங்கள் முதலில் அறிவிக்கப்பட வேண்டும் என்று வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு அலகுகள் சிசிடிவியால் கண்காணிக்கப்படும் பாதை வழியாகதான் வாக்கு எண்ணும் அறைக்குள் கொண்டு செல்வதை உறுதி செய்ய வலியுறுத்தினோம். அதேபோல், மின்னணு கருவியில் தற்போதைய தேதி மற்றும் நேரம் டிஸ்ப்ளே ஆவதை காண்பிக்கவும் கேட்டுக் கொண்டோம். இந்த சரிபார்ப்பு முக்கியமானது, ஏனென்றால் அது செய்யப்படாவிட்டால், வாக்குச் சாவடியிலிருந்து வந்த அதே கட்டுப்பாட்டு அலகுதான், அது மாற்றப்படவில்லை என்பதற்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை, வாக்குப்பதிவின் தொடக்க மற்றும் முடிவு நேரம் மற்றும் தேதியை இயந்திரத்தில் சரிபார்க்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டபோது அதில் பயன்படுத்தப்பட்ட சீட்டுகளை வாக்கு எண்ணிக்கை முகவர்களிடம் சரிபார்ப்புக்காக காட்ட வேண்டும். முடிவுகளுக்கான பொத்தானை அழுத்திய பின், வாக்குப்பதிவு தேதியை அதிகாரிகள் மீண்டும் சரிபார்ப்பதில்லை. தேதியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.

 

The post அனைத்து வழிகாட்டுதல்களையும் முறைப்படி பின்பற்ற வேண்டும் வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,India ,All India Party ,Chief Election Commissioner ,Commissioners ,Delhi ,Abhishek ,Congress ,All India Alliance ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் இவிஎம்மை...