×

2 ஐடி ஊழியர்கள் பலியான வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்; போதை சிறுவனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் இருக்கு!: ஒருவன் செய்த குற்றத்தை மறைக்க வரிசையாக சிக்கிய பரிதாபம்

மும்பை: புனேயில் போதை சிறுவன் ஓட்டி வந்த கார் விபத்துக்குளானதால் 2 ஐடி ஊழியர்கள் பலியான சம்பவத்தில், ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது ஜெயிலில் இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19ம் தேதி 17 வயதுடைய சிறுவன் குடிபோதையில் ஓட்டி சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் இரண்டு ஐடி ஊழியர்கள் பலியாகினர். சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காரை சிறுவன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சிறுவனை கைது செய்த போலீசார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சிறுவனுக்கு கார் வழங்கிய அவரது தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால், சிறுவனுக்கு மது வழங்கியதாக மதுபானக் கூட உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சிறுவனுக்கு பதிலாக குடும்ப டிரைவரை சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத்தாவையும் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றியதாக சசூன் பகுதி அரசு மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார், மருத்துவமனை கடைநிலை ஊழியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் ரத்தப் பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரிக்குப் பதிலாக, தனது ரத்த மாதிரியை சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் ெகாடுத்திருந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக, ரத்த மாதிரி மோசடியை ஷிவானி செய்திருந்தார். அதற்கு மருத்துவமனை ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இதன் பேரில் ஷிவானி மீது போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஷிவானி, நேற்று நள்ளிரவு மும்பையில் அவரை ேபாலீசார் கைது செய்தனர்.எப்படியாகிலும் புனேயில் நடந்த குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில், முதலில் விபத்தை ஏற்படுத்திய மைனர் மகன், 17 வயது மகனிடம் காரை கொடுத்த தந்தை விஷால் அகர்வால், டிரைவரை சிக்க வைக்க முயன்ற தாத்தா சுரேந்திர அகர்வால், ரத்த மாதிரியை மாற்றிக் கொடுத்த தாய் ஷிவானி அகர்வால் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார், மருத்துவமனை கடைநிலை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது விபத்து நடந்த நாளில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்ற சிறுவனுடன் மேலும் 2 சிறுவர்கள் இருந்துள்ளனர். அந்த இரு சிறுவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளும் சசூன் மருத்துவமனையில் ெபறப்பட்டன. ஆனால் அவர்களது ரத்த மாதிரிகளும் மாற்றப்பட்டுள்ளது. சசூன் மருத்துவமனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில். மூன்று சிறார்களின் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். 3 சிறுவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் குப்பையில் வீசப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரிக்கு பதிலாக அவரது தாயின் ரத்த மாதிரியும், மற்ற இரு சிறுவர்களின் ரத்த மாதிரிகளுக்கு பதிலாக அவரது 2 உறவினர்களின் ரத்த மாதிரியும் பெறப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கில் மேலும் சிலர் கைது ெசய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்க ரூ.3 லட்சம் லஞ்சம்?;
ேபாதையில் விபத்தை ஏற்படுத்தி 2 பேரை கொன்ற சிறுவனை (மகனை) காப்பாற்ற, முதலில் அவரது பெற்றோர் முயற்சித்தனர். அதற்காக மருத்துவ துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். காரை ஓட்டியது தங்களது டிரைவர் எனக்கூறி, முதலில் டிரைவரை குற்றவாளியாக்க முயற்சித்தனர். அதற்கான வேலைகளை தாத்தா செய்துள்ளார். தொழிலதிபாரான தந்தை, தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது மகனை குற்ற வழக்கில் இருந்து காப்பாற்ற மேல்மட்ட அரசியல், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளார். தனது மகனை காப்பாற்ற ரத்த மாதிரிகளை தாய் மாற்றிக் கொடுத்தார். இதற்கெல்லாம் உடந்தையாக இருந்த மருத்துவத்துறை, காவல் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மருத்துவ துறையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையை சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

எம்எல்ஏ காட்டம்;
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்எல்ஏ ரோஹித் பவார் வெளியிட்ட பதிவில், ‘கல்யாணி நகரில் இரண்டு அப்பாவிகள் விபத்தில் பலியான விசயத்தில், மாநில அரசின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் முகமும் அம்பலமானது. காவல் துறை அதிகாரிகள் பணம் பறித்தனர்; மருத்துவர்கள் கை கழுவினர்; வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்களை மூடிக் கொண்டிருந்தனர்; கலால் துறையினர் மது குடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்; சிறார் நீதிமன்றம் கட்டுரை எழுத சொன்னது மட்டுமின்றி சிறுவனை விடுவித்தது’ என்று கூறியுள்ளார்.

12 தனிப்படைகள் கண்காணிப்பு;
புனே காவல்துறைத் தலைவர் அமிதேஷ் குமார் கூறுகையில், ‘சங்கலி தொடர் போல் இவ்வழக்கின் போக்கு ெசல்கிறது. இவ்வழக்கில் சிறுவன், அவரது தந்தை, தாய், தாத்தா, மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஐபிசி, சிறார் நீதிச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 போலீசார் இந்த வழக்கின் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர். விபத்து தொடர்பான பதிவு செய்யப்பட்ட 3 எப்ஐஆர்களில், சிறார்க்கு மதுபானம் வழங்கிய பார் மீது ஒரு வழக்கு, உரிமம் இல்லாமல் காரை ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தை மீது ஒரு வழக்கு, விபத்துக்கான பழியைச் சுமக்க குடும்ப ஓட்டுநரை நிர்பந்தம் செய்தது தொடர்பான மற்றொரு வழக்கு என்று தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

The post 2 ஐடி ஊழியர்கள் பலியான வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்; போதை சிறுவனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் இருக்கு!: ஒருவன் செய்த குற்றத்தை மறைக்க வரிசையாக சிக்கிய பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Kalyani Nagar ,Pune Nagar, Maharashtra ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்