×

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பக்கத்தில் போலீசார் எச்சரிக்கை

 

சிவகங்கை, ஜூன் 1: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகில் போதை பொருள் விற்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து கொரியர், பார்சல் சர்வீஸ் மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து மட்டுமே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இதை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தலா 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் அருகில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது. பொருட்கள் கொண்டு வரப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் பற்றிய தகவல்கள் இருந்தால் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு கூறினர்.

 

The post சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பக்கத்தில் போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Sivagangai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...