×

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு திருவள்ளூரில் 112 டிகிரி வெயில் கொளுத்தியது: 4ம் தேதி வரை வெப்பம் தகிக்கும்

சென்னை: வட மாநிலங்களில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு திருவள்ளூரில் 112 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து 4ம் தேதி வரை இயல்பைவிட 3-5டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை இருக்கும். மேலும், தென் தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்த பருவகாலம் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதிக்குள் நிகழ்வதுதான், ஆனால் வலுவான மேற்கத்திய காற்று மற்றும் வெட்டு மண்டலம் எனப்படும் வானிலை மாற்றம் ஆகியவற்றால் கேரளாவில் பலத்த மழைக்கான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளன. கேரளாவில் தீவிரமாகிவரும் வானிலைக்கு ஏற்ப உள்ளூர் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கேரளாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களில் கேரளா மற்றும் மாஹேயில் பலத்த மழை (64.5 மி.மீ- 115.4 மி.மீ.) பெய்யக்கூடும்.

இந்த காலகட்டத்தில், அடுத்த ஏழு நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் பரவலான, மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்காரணமாக அண்டை மாநிலங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, தமிழ்நாடு மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் ஜூன்1ம் தேதி முதல் 3ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், தென் தமிழக பகுதிகளி்ன் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதனால், தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், 2ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கிளல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட மாநிலங்களில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய மாநிலங்களில் நேற்று 113 டிகிரி முதல் 118 டிகிரி வ ரை வெயில் சுட்டெரித்தது. அதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில் 107 டிகிரி முதல் 113 டிகிரி அளவில் வெயில் கொளுத்தியது. அதேபோல ஆந்திரா, ராயலசீமாவிலும் வெயில் கொளுத்தியது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் நேற்று வெயில் அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு திருவள்ளூரில் 112 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வேலூர் 111 டிகிரி, திருத்தணி 108, சென்னை விமான நிலையம் 107 டிகிரி, ஈரோடு 105 டிகிரி , திருவண்ணாமலை 106 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் நிலவியது. இது இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ்சுக்கும் கூடுதலாக இருந்தது. இதேநிலை 4ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் இயல்பை ஒட்டியும் வெப்பநிலை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* நாக்பூரில் 133 டிகிரி வெயில்?
வட மாநிலங்களில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதிகபட்ச அளவாக 133 டிகிரி வெயில் நேற்று பதிவானது. ஆனால், தானியங்கி வானிலை நிலைய சென்சார் கருவிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் தவறான வெப்ப நிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு திருவள்ளூரில் 112 டிகிரி வெயில் கொளுத்தியது: 4ம் தேதி வரை வெப்பம் தகிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tamil Nadu ,CHENNAI ,Thiruvallur ,
× RELATED தமிழகத்திலேயே அதிக வாக்கு...