×

ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே மகிழ்வார்.. ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு..!!

திருவனந்தபுரம்: அரசு நிலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை 6 மாதத்திற்குள் அகற்ற உத்தரவிட்டிருக்கும் கேரள உயர்நீதிமன்றம் இல்லாத ஏழைகளுக்கு அந்த இடங்களை வழங்கினால் கடவுளே மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்துள்ளது. அந்த மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு சொத்துகளை அடையாளம் கண்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தோட்ட வேலை செய்யும் தொழிலாளர்கள் லயம் என்று அழைக்கப்படும் தங்குமிடங்களில் வசிப்பதாகவும், இந்து மாதத்தில் நம்பிக்கை கொண்ட அவர்கள் சிறிய கட்டடங்களில் கோயில்களை உருவாக்கியதாகவும் தெரிவித்தார். இதற்கு மாநகராட்சி எதிர்ப்பு தெரிவிக்காததால், உள்ளூர் மக்கள் அதை சுற்றி பெரிய கட்டிடங்களை எழுப்பி வழிபாட்டு தலங்களை உருவாக்கி உள்ளதாகவும் அவர் கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பி.வி.குன்னி கிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் அரசு நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடவுள் என்பவர் சர்வ வல்லமை படைத்தவர் என்றும் உடல், வீடு என அனைத்து இடங்களிலும் நிறைந்திருப்பார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மத வழிபாட்டு தலங்களை அமைக்க கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிக்க தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு நிலங்களை பகிர்ந்து அளித்தால் கடவுள் மகிழ்ச்சி அடைவார் என்றும் நீதிபதி தெரிவித்தார். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள மதம் சார்ந்த கற்கள், சிலுவைகள், கட்டுமானங்களை அதிகாரிகள் உடனே அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை காவல்துறை உதவியுடன் அகற்ற வேண்டும் என்றும், சிறிய மாநிலமான கேரளாவில் நூற்றுக்கணக்கான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். அரசு நிலங்களை மத நோக்கங்களுக்காக பயன்படுத்த கூடாது என்றும், இது மாநில மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு மத தெய்வத்தின் சிலையை நிறுவ அனுமதி வழங்கினால், பிற மதத்தினரும் அனுமதி பெற முயற்சிப்பார்கள் என்றும் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே மகிழ்வார்.. ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : God ,Kerala iCourt ,Thiruvananthapuram ,Kerala High Court ,
× RELATED இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!