×

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு

* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு
* தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தூக்கமிழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி எஸ்டேட்கள் உள்ளன. இங்கு முழுவதும் தேயிலை, காபி உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. தேயிலை தோட்டப் பணிகளில் கடந்த 95 ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கேயே தங்கி தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 தலைமுறைகளாக பணியாற்றி வருகின்றனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், தேயிலை தயாரிக்கும் நிறுவனங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன.

இந்த இடத்தை கடந்த 1929ம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது. வனப்பகுதியில் தேயிலை, காப்பி, ஏலக்காய், மிளகு போன்ற பணப்பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்டது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலை எஸ்டேட்டில் தொழிலாளர்கள் குடியிருப்பதால் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தபால் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், அரசு உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள், ரேஷன்கடை, தேயிலை தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.

இங்குள்ள எஸ்டேட் பகுதிகள், எஸ்டேட் சாலைகள் உள்ளிட்ட 8373 ஏக்கர் பகுதி உள்ளிட்ட மொத்தமுள்ள 23 ஆயிரம் ஏக்கரையும் காப்புக்காடாக கடந்த 28.02.2018ல் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை காலம் வரும் 2028ம் ஆண்டுடன் முடிவடைவதால், வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து ஆகிய பகுதிகளை உள்ள தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. எனவே குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருந்தாலும், தற்போது முதலே மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேயிலை தோட்டத்தில் உள்ள பொருட்களை கீழே கொண்டு வருவதற்கே பல மாதங்கள் தேவைப்படும் என்பதால் தான் முன்னதாகவே தொழிலாளர்களை வெளியேற்றும் பணியில் தீவிரம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அறிவிப்பை பிபிடிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாஞ்சோலை. மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால். சிங்கம்பட்டி குரூப்பின் வணிகத்தை நிலை திருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி. லிமிடெட் வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் பலன்கள் பெற்றுக் கொள்ளலாம். விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது கருணைத் தொகை, 2023-2024 -ம் நிதி ஆண்டிற்கான சட்டப்படியிலான போனஸ் தொகை (மிகை ஊதியம்) இணைத்து வழங்கப்படும்.

விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் கையொப்பமிட வேண்டும். விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்கள் பெறுகின்ற பணப்பலன்களின் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும். தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் அலுவலகத்திலும் தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பார்வைக்காக ஜூன் 14ம் தேதி வரை வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் ஜூன் 14ம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 95 ஆண்டுகளுக்கு மேலாக 4 தலைமுறைகளாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால் மிகுந்த கவலையில் உள்ளனர். மலைப்பகுதியில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது வேறு வேலை எதுவும் தெரியாத நிலையில், தேயிலைத் தோட்ட வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடன் எங்கே செல்வது, அடுத்து என்ன வேலை செய்வது எனப் புரியாமல் விழிபிதுங்கி தூக்கமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறுகையில், ‘எங்கள் முன்னோர்கள் ரத்தத்தை வியர்வையை சிந்தி இங்கிருந்த காடுகளைத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றினர்.

நாங்கள் பல தலைமுறைகளாக இங்கே வேலை செய்கிறோம். எங்களுக்குத் தேயிலை பறிப்பதைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. இப்போது திடீரென வெளியேற வேண்டும் என்று ஆலை நிர்வாகம் சொல்வதால், செய்வதறியாமல் நிற்கிறோம். மலையிலேயே வாழ்ந்து விட்டதால், சமநிலை பகுதியில் எந்த இடமோ, வீடோ இல்லாமல் புதிய இடத்துக்குப் பிள்ளைகளோடு சென்று எப்படிப் பிழைக்கப் போகிறோமோ என்ற நினைப்பிலேயே தூக்கமிழந்து தவிக்கிறோம்’ என்று வேதனையோடு தெரிவித்தனர்.

தமிழக அரசே ஏற்று நடத்துமா?
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டுகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனும், மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும், தேயிலை பறிப்பதைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளா்களின் வேலையுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

 

The post நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Manchole Tea Garden ,BBTC Administration ,Tea Garden Administration ,Manchole Mountain Area ,Dinakaran ,
× RELATED அங்காடி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை;...